அமெரிக்கா, இஸ்ரேலால் கொல்லப்பட்ட முக்கிய ஈரான் தலைவர்கள் யார்?

அமெரிக்கா, இஸ்ரேலால் கொல்லப்பட்ட முக்கிய ஈரான் தலைவர்கள் யார்?

ஈரானை சேர்ந்த எந்தவொரு உயர் அதிகாரியையும் அனுமதிக்காக காத்திருக்காமல் தாக்குவதற்கு இஸ்ரேலிய ராணுவத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறியுள்ளார்.

சில முக்கிய ஈரானிய தலைவர்களைக் கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு இது வெளிவந்துள்ளது.

அவ்வாறு கொல்லப்பட்டவர்களில் ஈரானின் உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி, உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதீஃப் மற்றும் சமீபத்திய வாரங்களில் கொல்லப்பட்ட பிற மூத்த அதிகாரிகளும் அடங்குவர்.

“உளவு மற்றும் செயல்பாட்டு வட்டத்திற்கு உட்பட்ட எந்தவொரு மூத்த ஈரானிய அதிகாரியை கூடுதல் அனுமதியைக் கேட்காமல் கொல்வதற்கு, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் நானும் இஸ்ரேலிய ராணுவத்திற்கு அங்கீகாரம் அளித்துள்ளோம்,” என்று காட்ஸ் கூறினார்.

இந்த அதிகாரிகள் ஈரானின் அதிகார கட்டமைப்பில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருந்தனர்? இப்போது யார் பொறுப்பில் இருக்கிறார்கள்? ஈரானின் தலைமை எவ்வாறு மாறியுள்ளது என்பதைப் பற்றி இங்கு எளிமையாகத் தெரிந்துகொள்வோம்.

ஆயதுல்லா அலி காமனெயி – அதிஉயர் தலைவர்

ஈரானின் அதிஉயர் தலைவரான ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்ட சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களைத் தொடங்கிய முதல் நாளான பிப்ரவரி 28ஆம் திகதி இந்தச் சம்பவம் நிகழ்ந்ததால், இது மேலதிக ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஆயதுல்லா அலி காமனெயி (87) 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஈரானை ஆட்சி செய்து வந்தார்.

1979ஆம் ஆண்டில் ‘ஈரான் இஸ்லாமிய குடியரசை’ உருவாக்கிய ஆயதுல்லா ரூஹுல்லா காமனெயிக்கு பிறகு இவர் தலைவராகப் பொறுப்பேற்றார்.

காமனெயி மிகவும் வலிமையான அதிகாரத்தைக் கொண்டிருந்தார்.

அவர் நாட்டின் தலைவராகவும், ‘புரட்சிகர பாதுகாப்புப் படை’ என்றழைக்கப்படும் சிறப்புப் படை உட்பட , ஒட்டுமொத்த ராணுவத்தின் உச்ச தளபதியாகவும் இருந்தார்.

அவர் ஒரு முழுமையான சர்வாதிகாரி என்று சொல்லிவிட முடியாது. இருப்பினும், தனக்குப் பிடிக்காத எந்தவொரு அரசாங்க முடிவையும் தடுத்து நிறுத்தும் அதிகாரம் அவருக்கு இருந்தது.

பொதுப் பதவிகளுக்குப் போட்டியிட யாரை அனுமதிக்கலாம் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தையும் அவரே பெற்றிருந்தார்.

ஈரானில் இயங்கி வந்த பல வலிமைமிக்க குழுக்களுக்கு இடையே நடுநிலையாகத் தன்னை அவர் நிலைநிறுத்திக் கொண்டார்.

சில நேரங்களில், சீர்திருத்தவாதிகளுக்கும் பழமைவாதிகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளில் தலையிடாமல் விலகி நின்று பார்த்தவாறு, தான் அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்பது போல் அவர் நடந்துகொண்டார்.

ஆனால் உண்மையில், தனக்கு எதிராக ஒரு வலிமையான எதிர்க்கருத்து அல்லது எதிர்ப்பு சக்தி வளர்வதை காமனெயி ஒருபோதும் அனுமதித்தது இல்லை.

அதேபோல, தான் ஏற்றுக் கொள்ளாத கொள்கைகள் எதுவும் நடைமுறைக்கு வருவதையும் அவர் அனுமதிக்கவில்லை.

அலி லாரிஜானி – உச்ச தேசிய பாதுகாப்பு சபையின் செயலாளர்

மார்ச் 17, 2026 அன்று, 68 வயதான அலி லாரிஜானி, தெஹ்ரானின் பர்திஸ் பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.

அவரது மகனும், அவரது துணை அதிகாரிகளில் ஒருவரும் இந்தத் தாக்குதலில் உயிரிழந்தனர். ஆயதுல்லா அலி காமனெயிக்கு பிறகு கொல்லப்பட்ட மிக மூத்த ஈரானிய தலைவர் இவர்.

லாரிஜானி ஒரு காலத்தில் ஈரானிய புரட்சிகர காவலர் படையில் தளபதியாகப் பணியாற்றினார்.

பின்னர், இரானின் அரசு ஊடகமான ‘ஈரானிய இஸ்லாமிய குடியரசு ஒளிபரப்பு சேவை’யின் தலைவராகப் பொறுப்பேற்று சுமார் 10 ஆண்டுகள் பணியாற்றிப் பெரும் புகழைப் பெற்றார்.

2004ஆம் ஆண்டில், அவர் காமனெயியின் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

கடந்த 2005 முதல் 2007 வரை மேற்கத்திய நாடுகளுடனான பேச்சுவார்த்தைகளில் ஈரானின் முதன்மை அணுசக்திப் பிரதிநிதியாக லாரிஜானி செயல்பட்டார்.

ஆனால் அப்போதைய அதிபர் மஹ்மூத் அஹமதிநெஜாத் உடனான கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர் அந்தப் பதவியை இழந்தார்.

பின்னர் அவர் ஈரானிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராகப் பொறுப்பேற்றார்.

இந்தப் பொறுப்பை அவர் தொடர்ந்து 12 ஆண்டுகள் வகித்தார்.

ஈரானிய நாடாளுமன்ற வரலாற்றிலேயே சபாநாயகர் பதவியை இவ்வளவு நீண்டகாலம் வகித்திருப்பது இதுவே முதல்முறை.

உச்ச தேசிய பாதுகாப்பு சபையில் காமனெயியின் பிரதிநிதியாகவும் லாரிஜானி செயல்பட்டு வந்தார்.

டிசம்பர் 2025, ஜனவரி 2026 ஆகிய மாதங்களில் இரான் முழுவதும் நடைபெற்ற போராட்டங்களின்போது, பசிஜ் துணை ராணுவக் குழு உள்ளிட்ட பாதுகாப்புப் படைகளைக் கொண்டு போராட்டங்களை மிகக் கடுமையாக ஒடுக்கும் நடவடிக்கைகளுக்கு இவரே தலைமை தாங்கியதாகக் கருதப்படுகிறது.

இந்தப் போராட்டங்களின்போது குறைந்தது 6,508 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதாகவும் 53,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாகவும் மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

அலி ஷம்கானி –ஈரானிய பாதுகாப்பு மன்றச் செயலாளர்

ரியர் அட்மிரல் அலி ஷம்கானி, ஆயதுல்லா அலி காமனெயியின் நெருங்கிய ஆலோசகராக இருந்தார்.

ஈரானின் பாதுகாப்பு மற்றும் அணுசக்தி தொடர்பான முடிவுகளில் அவர் ஒரு முக்கிய நபராக விளங்கினார்.

மேலும் அவர் ஈரானின் ஒரே ரியர் அட்மிரலாகவும் இருந்தார்.

தெஹ்ரான் மீது பிப்ரவரி 28ஆம் திகதி நடந்த தாக்குதல்களில் அவர் கொல்லப்பட்டார்.

இஸ்ரேல், ஈரான் இடையே ஜூன் 2025இல் நடந்த “12 நாள் போரின்போது” அவரது இல்லத்தின் மீது நடத்தப்பட்ட முந்தைய தாக்குதல்களில் இருந்து அவர் தப்பியிருந்தார்.

கடந்த 1980களில் நடந்தஈ ரான்-ஈராக் போரின்போது ஷம்கானி புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உயர்மட்டத் தளபதிகளில் ஒருவராக இருந்தார்.

கடந்த 40 ஆண்டுகளில், அவர் பல முக்கியப் பதவிகளை வகித்துள்ளார்.

இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், கடற்படைத் தளபதி, உச்ச தேசிய பாதுகாப்பு மன்றத்தின் செயலாளர் ஆகியவை அந்தப் பதவிகளில் அடங்கும்.

சமீபத்திய ஆண்டுகளில், ஈரானில் மக்கள் போராட்டங்களைக் முடக்குவதிலும் அவர் முக்கியப் பங்காற்றினார்.

முகமது பக்பூர் – ஐ.ஆர்.ஜி.சி தலைமைத் தளபதி

ஈரானிய அரசு ஊடகங்களின் தகவல்படி, பிப்ரவரி 28 அன்று தெஹ்ரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் மேஜர் ஜெனரல் முகமது பக்பூரும் கொல்லப்பட்டார்.

இவர் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் தளபதியாக 16 ஆண்டுகள் பணியாற்றியிருந்தார்.

இவருக்கு முன்பிருந்த தளபதியான ஹுசைன் சலாமி, “12 நாள் போரில்” கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, முகமது பக்பூர் ஐ.ஆர்.ஜி.சி-யின் தலைமைத் தளபதியாகப் பதவி உயர்வு பெற்றார்.

இஸ்மாயில் கதிப் – உளவுத்துறை அமைச்சர்

இஸ்மாயில் கதிப், 2021ஆம் ஆண்டில் அப்போதைய அதிபர் இப்ராஹிம் ரைசியால் நியமிக்கப்பட்டார்.

இவர் ஆயதுல்லா அலி காமனெயி உள்ளிட்ட மூத்த மதகுருமார்களிடம் இஸ்லாமிய சட்டத்தைப் பயின்றவர்.

மேலும் உளவுத்துறை அமைச்சகம், அதிஉயர் தலைவரின் அலுவலகம் ஆகியவற்றில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர்.

மார்ச் 18, 2026 அன்று, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல் ஒன்றில் இவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஈரானை “ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்திவிட்டதாக” அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்தார்.

அப்துல் ரஹீம் மௌசவி – ஈரானிய ஆயுதப் படையின் தலைவர்

மேஜர் ஜெனரல் தரத்தில் இருந்த அப்துல் ரஹீம் மௌசவி, பிப்ரவரி 28ஆம் திகதி தெஹ்ரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்டார்.

இவர் “12 நாள் போரில்” கொல்லப்பட்ட முகமது பாகேரிக்கு பதிலாகப் பொறுப்பேற்று, ஜூன் 12 அன்று ஈரானின் ஆயுதப் படைகளின் தலைவரானார்.

ஈரானிய தலைவர்களை குறிவைப்பதன் மூலம் சாதித்தது என்ன?

ஈரானிய அரசாங்கத்தை “திகைக்க வைப்பதும், குழப்பமடையச் செய்வதும்” தான் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் திட்டமாக இருந்தது என போரின் ஆரம்ப நாட்களில், அமெரிக்காவின் உயர்மட்ட ராணுவ தலைவரான டான் கெய்ன் தெரிவித்தார்.

ஆரம்பத்தில், ஈரானிய அரசாங்கத்தை மாற்றியமைக்க விரும்புவதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் பகிரங்கமாகவே அறிவித்தன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் வெளியிட்ட காணொளி ஒன்றில், ஈரான் மக்களிடம் “உங்கள் அரசாங்கத்தை நீங்களே கைப்பற்றுங்கள்” என்று அழைப்பு விடுத்தார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இதேபோன்ற கருத்தைத் தெரிவித்தார். மார்ச் 19 அன்று, ஈரானிய மக்கள் “சரியான தருணத்தைப் பயன்படுத்தி எழுச்சி பெற வேண்டும்” என்று அவர் அழைப்பு விடுத்தார்.

இருப்பினும், விஷயங்கள் அவ்வளவு எளிமையானவையாக இருக்கவில்லை.

ஈரானை பொறுத்தவரை, ஒரு “தியாகியாக” (மதத்திற்காகவோ அல்லது நாட்டுக்காகவோ) உயிர்துறப்பது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கருத்தாக உள்ளது.

இதன் காரணமாக, உயர்மட்டத் தலைவர்களின் மரணங்கள் ஓர் இழப்பாகச் சித்தரிக்கப்படாமல், கௌரவமிக்கதாகவும் வலிமைமிக்கதாகவும் முன்னிறுத்தப்படுகின்றன.

உதாரணமாக, அரசு தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஒருவர், ஆயதுல்லா அலி காமனெயியின் மரணம் குறித்துப் பேசுகையில், அவர் “தியாகம் என்னும் இனிமையான, தூய பானத்தைப் பருகி, உன்னதமான விண்ணுலகப் பேரரசில் இணைந்து கொண்டார்” என்று வர்ணித்தார்.

இரண்டு வாரங்களுக்கும் மேலாகக் கடந்த நிலையில், அலி லாரிஜானியின் மரணம் குறித்துப் பேசுகையில், ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு சபை பின்வருமாறு குறிப்பிட்டது,

“தியாகிகளின் தூய ஆன்மாக்கள், இறைவனின் நீதிமிக்க ஊழியரும் தியாகியுமான டாக்டர் அலி லாரிஜானியின் தூய்மையாக்கப்பட்ட ஆன்மாவை அரவணைத்துக்கொண்டன. ஈரானின் முன்னேற்றத்திற்காகவும் இஸ்லாமிய புரட்சிக்காகவும் வாழ்நாள் முழுவக்தும் போராடிய அவர், இறுதியில் தான் நீண்ட காலமாகப் போற்றி வந்த லட்சியத்தை அடைந்தார். இறைவனின் அழைப்புக்குப் பதிலளித்தார். மேலும் சேவைக் களத்தில் தியாகம் என்னும் இனிமையான அருளை கௌரவத்துடன் அடைந்தார்.”

இந்த மரணங்கள் அரசாங்கத்தை பலவீனப்படுத்துவதற்குப் பதிலாக, வலிமை, ஒற்றுமை, தியாகம் ஆகியவற்றை வெளிப்படுத்துவதற்கான ஒரு கருவியாக ஈரான் அரசால் பயன்படுத்தப்படுகின்றன.

பிபிசி

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )