
ஈரானிய கடற்படைத் தளபதி இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக அறிவிப்பு
ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) கடற்படைத் தளபதி அலிரேசா தங்சிறி (Alireza Tangsiri) கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
பண்டர் அப்பாஸ் (Bandar Abbas) பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹோர்முஸ் ஜலசந்தியை மூடும் யோசனையை அவரே முன்வைத்ததாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளதாக அந்த அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தத் தாக்குதலில் ஈரானின் பல சிரேஷ்ட கடற்படை அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இது தொடர்பில் ஈரான் இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என சர்வதேச ஊடக செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
அலிரேசா தங்சிறி 2018 ஆம் ஆண்டு ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
அவர் 2010 ஆம் ஆண்டு முதல் கடற்படையின் பிரதித் தளபதியாக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

