
சீர்திருத்தம் என்ற போர்வையில் கல்வியை ஆபாசமயப்படுத்தும் நடவடிக்கைகளை நாம் எதிர்க்கிறோம்
பெற்றோர்களின் பணத்தில் ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களையும், ஸ்மார்ட் திரைகளையும் பெற்றுக் கொள்வதன் மூலமே அரசாங்கம் கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்க முயற்சின்றது. இதற்காக பணம் திரட்டி ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு ரோயல் கல்லூரியில் கூட தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலொன்ன தேர்தல் பிரிவில் காணப்படும் வீரபா மகா வித்தியாலயம் மற்றும் பனாமுர ஆரம்பப் பிரிவு போன்ற பாடசாலைகளிலும் கூட இதுபோன்ற கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட் சாதனங்கள் அரச பணத்தில் பெற்றுத் தரப்படும் என்று ஜனாதிபதி தொழிற்சங்கங்களை சந்தித்த வேளை தெரிவித்தார்.
ஆனால் இவற்றை பெற்றோர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளுமாறு தற்போது பாடசாலைகள் ஊடாக கேட்டுக் கொள்ளப்பட்டு வருகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இந்தக் கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியே ஆரம்பித்தில் இருந்து கூறி வந்தது. ஆங்கிலம், ஜப்பான், சீன மற்றும் இந்தி போன்ற மொழிக் கல்வி மற்றும் தகவல் தொழிநுட்பம் போன்ற கல்விகள் தொடர்பில் நாம் பிரஸ்தாபித்த சமயங்களில், பிரபஞ்சம் வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்து வந்த சந்தர்ப்பங்களில் தற்போதைய ஆளும் தரப்பினரே கண்ணை மூடிக்கொண்டு எம்மை விமர்சித்தனர்.
அன்று இவ்வாறு சொன்னவர்கள் இப்போது கல்விச் சீர்திருத்தங்களில் ஆபாசமான விடயங்களைக் கொண்டு வந்து, இறுதியில் அரசாங்கமே இவற்றை இடை நிறுத்தி விட்டு, பெற்றோரைப் பயன்படுத்திக் கொண்டு இந்தச் சீர்திருத்தங்களை முன்னெடுக்குமாறு இப்போது தெரிவித்து வருகின்றனர்.
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி கோயபல்ஸ் கோட்பாட்டையே இந்த அரசாங்கம் இப்போது செய்து கொண்டிருக்கின்றது. கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கு நாம் ஆதரவு தெரிவிக்கிறோம். ஆனால் கல்வியை ஆபாசமயப்படுத்தும், கல்வியில் ஆபாசத்தை புகுத்தும் நடவடிக்கைகளை நாம் எதிர்க்கிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் (20) நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
தரம் 1-6 வரையிலான கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சி ஒருபோதும் கூறவில்லை. அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட கல்விச் சீர்திருத்தங்களின் ஆங்கில மொழி பாட அலகொன்றில் ஆபாச வலைத்தளமொன்று உட்சேர்க்கப்பட்டுள்ளது. இதனை எதிர்க்கட்சி செய்யவில்லை.
அரசாங்கம்தான் இதனைச் செய்தது. 1-6 வரையிலான தரங்களுக்கு இந்த கல்விச் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டபோது இதற்கு நாம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. 6 ஆம் தர ஆங்கில பாட அலகொன்றில் ஆபாச வலைத்தளமொன்று சேர்க்கப்பட்டதாலயே இந்த எதிர்ப்பை வெளிப்படுத்தினோம்.
இறுதியில், ஜனாதிபதியால் இந்த சீர்திருத்தங்கள் ஒரு வருடத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி தொடர்பிலான பிரச்சினைகள் காரணமாக, 2027 முதல் இதனை முன்னெடுப்போம் என்று ஜனாதிபதி கூறியுள்ளார் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்த சீர்திருத்தங்களை முறையாக முன்னெடுங்கள்!
இந்த சீர்திருத்தங்களை முறையாக முன்னெடுக்குமாறே எதிர்க்கட்சி கோரிக்கை விடுக்கின்றது. ஆபாச வலைத்தளங்களை உட்சேர்ப்பது அரசாங்கத்தில் இருக்கும் யாரினதும் தனிப்பட்ட விருப்பமாக இருந்தாலும் கூட, அது அரசின் கொள்கையாக அமைந்து விடக் கூடாது.
இந்த வலைத்தளத்தை சேர்ப்பதற்கு சமூகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பி இருந்தும், இதனைப் பொருட்படுத்தாது, இவர்கள் இதனை அச்சிட்டு, விநியோகித்து, பெருமளவிலான பணத்தை விரயம் செய்து விட்டு, இந்த தவறை எதிர்க்கட்சியின் மீது சுமத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கல்வி அமைச்சர் நாட்டில் இல்லாத இந்த சந்தர்ப்பத்தில், எதிர்க்கட்சியால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை அவசர அவசரமாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள இந்த அரசாங்கம் ஏன் முயற்சிக்கிறது?
அரசியலமைப்பில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவதற்கு ஒரு வழிமுறை காணப்படுகின்றது. இது அரசாங்கத்தின் அனுமதியுடன் முன்னெடுக்கப்பட வேண்டிய ஒன்றல்ல.
கல்வி அமைச்சர் நாட்டில் இல்லாத இந்த சந்தர்ப்பத்தில், எதிர்க்கட்சியால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை அவசர அவசரமாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள இந்த அரசாங்கம் ஏன் இவ்வாறு முயற்சிக்கிறது என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாதுள்ளது.
அவருக்கு அநீதி இழைக்காமல், அவரது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் சந்தர்ப்பம் வழங்கி, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்நேரத்தில், கல்வி அமைச்சருக்கு எதிராக அரசாங்கமே ஒரு சதித்திட்டத்தை தீட்டி வருகிறதோ என்ற சந்தேகம் எழுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்

