
தபால் திணைக்களத்தை ஒத்த போலி இணையதளத்தளத்தினூடாக பண மோசடி குறித்து பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை
தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தைப் போன்றே வடிவமைக்கப்பட்ட போலி இணையதளத்தைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் பாரிய மோசடி குறித்து தகவல் கிடைத்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களின் மொபைல் போன்களுக்கு குறுஞ்செய்தி (SMS) அனுப்பி, ஒரு பார்சலைப் பெற்றுக்கொள்வதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் எனக் கூறி, அந்தப் பணத்தை ஆன்லைன் மூலம் செலுத்துமாறு கோருகின்றனர்.
வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி அட்டைவிபரங்களை அந்தப் போலி இணையதளத்தில் உள்ள ‘Payment Gateway’ ஊடாக உள்ளிடும்போது, அவர்களின் வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் மோசடியாக திருடப்படுவதாக தபால் அதிபர் ஆர்.பி. சத்குமார அவர்கள் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான மோசடியான குறுஞ்செய்திகள், அவற்றில் உள்ள இணைப்புகள் மற்றும் ஆன்லைன் பணக் கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும்.
அடையாளம் தெரியாத அல்லது சந்தேகத்திற்குரிய இணையதள இணைப்புகளைத் திறக்க வேண்டாம்.
தமது வங்கி அட்டை விபரங்கள் அல்லது OTP எண்களை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மூன்றாம் தரப்பினருக்கோ அல்லது அங்கீகரிக்கப்படாத இணையதளங்களுக்கோ வழங்க வேண்டாம் என பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

