
ஒரு வைத்தியரை உருவாக்க அரசாங்கம் 6 மில்லியன் ரூபாவிற்கும் அதிக மக்கள் வரிப்பணத்தைச் செலவிடுகிறது – அமைச்சர் உபாலி பன்னில
ஒரு வைத்தியரை உருவாக்குவதற்காக அரசாங்கம் 6 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான மக்கள் வரிப்பணத்தைச் செலவிடுவதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னில இன்று (04) தெரிவித்துள்ளார்.
கிரிபத்கொட பகுதியில் இன்று காலை இடம்பெற்ற தனியார் வைத்தியசாலை ஒன்றின் திறப்பு விழாவில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் குறிப்பிட்டார்.
இதன்போது உயர் கல்விக்காக, குறிப்பாக மருத்துவத் துறைக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் பாரிய பொது முதலீடுகள் குறித்து அவர் விளக்கமளித்தார்.
ஏனைய தொழில்களுடன் ஒப்பிடுகையில் ஒரு வைத்தியருக்குப் பயிற்சியளிப்பதற்கான செலவு மிக அதிகம் என அவர் சுட்டிக்காட்டினார்.
ஒரு வைத்தியரை உருவாக்க சுமார் 6 மில்லியன் ரூபாவிற்கும் அதிக தொகை செலவிடப்படுகிறது.
ஒரு பொறியியலாளரை உருவாக்க அரசாங்கம் சுமார் 3 மில்லியன் ரூபாவைச் செலவிடுகிறது.
மருத்துவத் தொழிலின் சமூக மதிப்பு குறித்துக் கருத்துத் தெரிவித்த பேராசிரியர் பன்னில, வேத ராஜா எனப் போற்றப்பட்ட புத்ததாச மன்னனின் வரலாற்றைச் சுட்டிக்காட்டினார்.
இலங்கைச் சமூகத்தில் வைத்தியர்கள் நீண்டகாலமாக உயர்ந்த மரியாதையுடன் மதிக்கப்படுவதாகவும், அந்த மரியாதையைப் பாதுகாக்கும் வகையில் அவர்கள் தொடர்ந்து பணியாற்றுவார்கள் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.
பொது நிதியுதவியுடன் கூடிய தொழில் வல்லுநர்கள் தங்களது தரத்தையும் பொறுப்புக்கூறலையும் பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய போதே அமைச்சர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.

