
286 டொலருக்கு கச்சா எண்ணெய் வாங்கிய செய்தி பொய்டீசல் விலை மாத்திரமே அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளது- சிபெட்கோ தலைவர் விளக்கம்
இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்யும் போது,
ஒரு பேரல் கச்சா எண்ணெயை 286 டொலர்களுக்கு கொள்வனவு செய்யவில்லை என இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் குறித்து அவர் இவ்வாறு விளக்கமளித்தார்.
மத்திய கிழக்கு போர் சூழலுக்குப் பிறகு, மார்ச் 11 அன்று வந்த கப்பலில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 66.99 டொலர்களுக்கே கொள்வனவு செய்யப்பட்டது. இன்று வருகின்ற கப்பலில் அதன் விலை 71.99 டொலர்களாகும்.
எனவே, 286 டொலருக்கு கச்சா எண்ணெய் வாங்கியதாகக் கூறப்படும் செய்திகளில் உண்மையில்லை.
HSBC வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியின் அறிக்கையை ஊடகங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கலாம் அல்லது வேண்டுமென்றே தவறாகப் பரப்பியிருக்கலாம். அவர்கள் எரிபொருள் கொள்வன என்றே குறிப்பிட்டிருந்தனர், ‘கச்சா எண்ணெய் என்று அல்ல.
கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்த போதிலும், உலக சந்தையில் டீசலின் விலை பாரிய அளவில் அதிகரித்துள்ளது.
இதற்கமைய, மார்ச் 31 அன்று வந்த டீசல் கப்பலுக்கு ஒரு பேரலுக்கு 285.28 டொலர்களும், ஏப்ரல் 7 அன்று வந்த கப்பலுக்கு 288.06 டொலர்களும் செலுத்த வேண்டியிருந்தது.
சூப்பர் டீசல் ஒரு பேரல் 303.77 டொலர்கள் என்ற அதிக விலைக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் எரிபொருள் விநியோகத்தைத் தடையின்றி முன்னெடுப்பதற்காகவே இவ்வளவு அதிக விலைக்கு டீசலை வாங்க வேண்டியிருந்தது.
அவ்வாறு செய்யாவிட்டால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் என தலைவர் ராஜகருணா மேலும் தெரிவித்தார்.
கச்சா எண்ணெய் என்பது சுத்திகரிக்கப்படாத எண்ணெய், டீசல் என்பது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளாகும். இரண்டிற்கும் உலக சந்தையில் வெவ்வேறு விலைகள் நிலவுகின்றன.

