
புத்தாண்டு காலத்தில் வீதி விபத்துக்கள் மற்றும் நீரில் மூழ்கியதில்80 பேர் உயிரிழப்பு
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் இடம்பெற்ற வீதி விபத்துக்கள் மற்றும் நீரில் மூழ்கிய சம்பவங்களினால் மாத்திரம் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரையான காலப்பகுதியிலேயே இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.
இக்காலப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் மாத்திரம் 53 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
ஏப்ரல் 10 மற்றும் 13 ஆம் திகதிகளிலேயே அதிகளவிலான வீதி விபத்து மரணங்கள் பதிவாகியுள்ளன.
நீரில் மூழ்கிய சம்பவங்கள்: நீர்நிலைகளில் நீராடச் சென்றபோது நீரில் மூழ்கியதில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில், இந்த வருட புத்தாண்டு காலத்தில் வீதி விபத்துக்கள் மற்றும் நீரில் மூழ்கிய சம்பவங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக பொலிஸார் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

