அக்குரேகொட இரட்டைக் கொலை ; துப்பாக்கிதாரிக்கு 10க்கும் மேற்பட்ட கொலைகளில் தொடர்பு ?

அக்குரேகொட இரட்டைக் கொலை ; துப்பாக்கிதாரிக்கு 10க்கும் மேற்பட்ட கொலைகளில் தொடர்பு ?

அக்குரேகொடவில் உள்ள பல்பொருள் அங்காடி முன்பாக வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவியை சுட்டுக்கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட கோனபீனுவலவைச் சேர்ந்த சுனில் ரஞ்சித் “மகாசோஹோன் கலு” என அழைக்கப்படும் துப்பாக்கிதாரி, இதற்கு முன்பு 10க்கும் மேற்பட்ட கொலைகளில் தொடர்புடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

46 வயதுடைய இவர், 2009 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலத்தில் சட்டப்பூர்வமாக இராணுவத்திலிருந்து விலகிய முன்னாள் இராணுவ வீரர் என தெரிவிக்கப்படுகிறது.

தற்போது 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சந்தேக நபர், குறித்த கொலை மற்றும் இதர கொலைச் சம்பவங்கள் தொடர்பாக அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

இதேவேளை, கொலைக்கு முந்தைய நாள் கொட்டிகாவத்தையில் அமைந்துள்ள இரு மாடி வீடு ஒன்றில் துப்பாக்கிகளைச் சோதித்ததாகக் கூறப்படும் இடத்தை விசேட பொலிஸ் குழு சோதனை செய்யவுள்ளது.

அதன்பின், அவர் பன்னிபிட்டிய பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்குச் சென்றதாகவும், அங்கு “கரந்தெனிய சுத்தா” என அழைக்கப்படும் நபரின் நெருங்கிய உறவினர் மூலம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விசாரணைகளின் படி, கரந்தெனிய சுத்தா மற்றும் சந்தேக நபர் இடையே நீண்டகால நெருங்கிய தொடர்பு இருந்ததுடன், முன்பு சில குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டபோது பிணைத் தொகை செலுத்தியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், கொலை நடைபெற்ற நாளில் கரந்தெனிய சுத்தா, சந்தேக நபருக்கு பல தொலைபேசி அழைப்புகள் மேற்கொண்டதாக தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )