
உடன்பாட்டுக்கு வரத் தவறினால் ஈரானுக்கு எதிராக மீண்டும் குண்டுவீச்சுகள் ஆரம்பிக்கப்படும் – டிரம்ப் எச்சரிக்கை
தற்போது நடைமுறையில் உள்ள இரண்டு வார கால போர் நிறுத்தத்தை மேலும் நீடிக்க முடியாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
“எங்களிடம் அவ்வளவு பெரிய கால அவகாசம் இல்லை” என்று குறிப்பிட்ட அவர், விரைவில் ஒரு உடன்பாட்டுக்கு வரத் தவறினால் ஈரானுக்கு எதிராக மீண்டும் குண்டுவீச்சுகளை ஆரம்பிக்கப்போவதாக வலியுறுத்தினார்.
ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி , தான் எதிர்வரும் நாட்களில் “குண்டுத் தாக்குதல்களை” எதிர்பார்ப்பதாகவும், அமெரிக்க இராணுவம் அதற்காக மிகுந்த தயார் நிலையுடனும் ஆர்வத்துடனும் இருப்பதாகவும் கூறினார்.
ஈரானுடனான மோதல் நிலையைத் தீர்ப்பதற்கான புதிய ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் மட்டுப்படுத்தப்பட்டது என்பதையும், இராஜதந்திர ரீதியிலான தீர்வை விட இராணுவ ரீதியிலான நடவடிக்கையிலேயே தனது கவனம் அதிகம் ஈர்க்கப்பட்டுள்ளதையும் ஜனாதிபதி டிரம்பின் இந்த அறிக்கை உணர்த்துவதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

