இந்தியத் துணை ஜனாதிபதியுடனான சந்திப்பை  தமிழ் அரசியல் தர்ப்பினர் சரியாகப் பயன்படுத்தியிருக்கவில்லை

இந்தியத் துணை ஜனாதிபதியுடனான சந்திப்பை  தமிழ் அரசியல் தர்ப்பினர் சரியாகப் பயன்படுத்தியிருக்கவில்லை

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஸ்ணன் உடனான சந்திப்பை தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய துணை ஜனாதிபதியின் இலங்கை வருகை மற்றும் தமிழ் அரசியல் தலைவர்களுடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த அவர், அந்த சந்திப்பு தமிழ் மக்களின் தேவைகள் மற்றும் அபிலாசைகளை முன்வைக்கும் வகையில் அமையவில்லை என தெரிவித்தார்.

மேலும், தமிழ் அரசியல் தரப்பினர்கள் தமக்குள் நிலவும் உள்கட்டமைப்பு பிரச்சினைகள் மற்றும் கருத்து வேறுபாடுகளை முன்வைத்து தீர்வு கோரியதுபோல் அந்த சந்திப்பு அமைந்ததாகவும் அவர் சாடினார். இது தமிழ் மக்களுக்கும் தமக்கும் ஏமாற்றத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.

இன்றைய சூழலில் இந்திய துணை ஜனாதிபதியின் இலங்கை வருகை வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், அந்த சந்தர்ப்பத்தை தமிழ் தரப்பினர் பயனுள்ளதாக பயன்படுத்தாதது கவலைக்குரியது என அவர் குறிப்பிட்டார்.

தாம் முன்னர் இத்தகைய சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி மக்களுக்கு பல நன்மைகளைப் பெற்றுத்தந்ததாகவும், குறிப்பாக 2010 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உடன் இந்தியா சென்றபோது 50,000 வீடமைப்பு திட்டம், 500 உழவு இயந்திரங்கள், யாழ்ப்பாண கலாசார மையம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளைப் பெற்றதாகவும் நினைவூட்டினார்.

அதேபோல், 13ஆவது திருத்தச் சட்டமே தீர்வுக்கான ஆரம்பம் என்றாலும் அது நிரந்தர தீர்வாக அமையாது என்றும் அப்போது வலியுறுத்தியிருந்ததாக தெரிவித்தார்.

தற்போது நடைபெற்ற சந்திப்பில் கூட குறைந்தபட்சமாக 13ஆவது திருத்தச் சட்டத்தின் அமலாக்கத்தை வலியுறுத்தியிருக்கலாம் என கூறிய அவர், தமிழ் அரசியல் தரப்பினர் வழமைபோல் தமது சுயநல அரசியலிலேயே ஈடுபட்டுள்ளதாகவும் விமர்சித்தார்.

இந்த நிலைமை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும், இவ்வாறு மக்கள் தேவைகளை புறக்கணித்து உள்நிலை பிரச்சினைகளில் கவனம் செலுத்தியிருப்பது வருத்தமளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )