பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

கைத்துப்பாக்கி காட்டி மிரட்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இளவாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெரியவிளான் பகுதியில் உள்ள காணி தொடர்பாக, பாராளுமன்ற உறுப்பினருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையில் நிலவி வந்த பிணக்கின் பின்னணியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை குறித்த காணிக்குள் இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் தீவிரமடைந்த நிலையில், எம்.பி. தனது கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இதையடுத்து இளவாலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

அதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் (27) இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்ட அர்ச்சுனா இராமநாதன், வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அவரை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் தமது காணிக்குள் அத்துமீறி நுழைந்து தன்னை அச்சுறுத்தியதாக எம்.பி. வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், அவருடன் முரண்பட்ட தரப்பைச் சேர்ந்த பெண் ஒருவர் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அந்த பெண் நேற்று (26) மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், குறித்த பெண் ஒரு வயது குழந்தையின் தாய் என்பதும், குழந்தைக்கு பாலூட்ட வேண்டிய அவசியம் உள்ளதென மன்றில் சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து, குழந்தையை தாயுடன் வைத்திருக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )