
அஸ்வெசும பயனாளிகளை அடையாளம் காணும் முறையை மேலும் ஒழுங்குபடுத்த நடவடிக்கை
அஸ்வெசும பயனாளிகளைச் சரியாக அடையாளம் காணுதல் மற்றும் பட்டியலிடுதல் செயல்முறையை அதிக வினைத்திறனுடனும் துல்லியமாகவும் மாற்றுவது குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று நிதி அமைச்சில் நடைபெற்றது.
இதன்போது, தற்போது நடைமுறையிலுள்ள பயனாளிகளை அடையாளம் காணும் முறைமையின் அளவுகோல்களைத் திருத்தியமைத்தல், செயல்முறையை விரைவுபடுத்துதல் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மிகவும் துல்லியமாகப் பயனாளிகளை அடையாளம் காணுதல் குறித்து விரிவாக அவதானம் செலுத்தப்பட்டது.
மேலும், நீண்டகால அடிப்படையில் சட்டத் திருத்தங்களை மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகளுடன், குறுகிய காலத்தில் நடைமுறைப்படுத்தக்கூடிய தீர்வுகளைக் கண்டறிவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
இவற்றுக்கு மேலதிகமாக ,
பணியாளர் வெற்றிடங்களை நிரப்புதல். கிராம உத்தியோகத்தர்களைச் செயற்திறனுடன் இணைத்துக்கொள்ளுதல்.
கொடுப்பனவு முறைமைகளைத் திருத்தியமைத்தல் மற்றும் அது சார்ந்த பிரச்சினைகள் போன்ற விடயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே, தொழிலாளர் அமைச்சர் மற்றும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன ஆகியோருடன் நலன்புரி நன்மைகள் சபையின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

