
‘எஹிபஸ்ஸிகோ’ அமைதிக்கான நடைபயணத்தின் அரச நிறைவு விழா ஜனாதிபதியின் பங்கேற்புடன்
இலங்கை மக்கள் காட்டிய மரியாதை, முகங்களில் தென்பட்ட புன்னகை மற்றும் அவர்கள் மனமுவந்து வழங்கிய பாதுகாப்பு என்பன உண்மையான வலிமை என்ன என்பதை உணர்த்துவதாக வியாநாமில் இருந்து வருகை தந்த பன்னாகர தேரர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 07 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற ‘எஹிபஸ்ஸிகோ’ அமைதிக்கான நடைபயணத்தின் அரச நிறைவு விழா, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இன்று (28) பிற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்
அமைதியான ஒரு தேசம் என்பது இதுதான்.
இதற்காக எனது சார்பாகவும், சமாதான நடைப்பயணக் குழுவினர் மற்றும் இப்பயணத்தை அனுபவித்த அனைவர் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்
ஒவ்வொரு தனிமனிதனும் தனக்குள் அமைதியை ஏற்படுத்திக்கொண்டால், குடும்பங்கள் அமைதியாகும், சமூகம் அமைதியாகும், நாடுகள் அமைதியாகும், அப்போது ஒட்டுமொத்த உலகமே அமைதியடையும். அமைதி என்பது வெளியிலிருந்து உள்ளே வருவதல்ல, அது உள்ளிருந்து வெளியே உருவாவதாகும் என பன்னாகர தேரர் தெரிவித்துள்ளார்.
இங்கு, புனித தந்ததாது மற்றும் ஜய ஸ்ரீ மகா போதியின் கன்றையும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பன்னாகர தேரரிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
இதனையடுத்து உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,
எமது அழைப்பை ஏற்று இலங்கைக்கு வருகை தந்து இந்த அமைதிக்கான பணியில் ஈடுபட்டதற்காக பன்னாகர தேரருக்கு முதலில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார்.
அதேபோல், இதன் ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்ட மெல்பிட்டியே விமலக்கித்தி தேரருக்கும் நன்றி கூற வேண்டும்.
அமைதியின் பெறுமதி குறித்து இலங்கைக்கு பல அனுபவங்கள் உள்ளன. நீண்டகாலப் போரின் பேரழிவு குறித்த மிகவும் வேதனையான அனுபவங்களைக் கொண்டவர்கள் நாம்.
அதாவது, அமைதி எவ்வளவு முக்கியமானது, உலக அமைதி உலகிற்கு எவ்வளவு பெரிய காரியத்தைச் செய்யும் என்ற எதிர்பார்ப்பு நம் அனைவரிடமும் உள்ளது.
இதற்காகப் பன்னாகர தேரர் உள்ளிட்ட பிக்குகள் மேற்கொள்ளும் முயற்சிக்கு எமது நன்றிகளையும் கௌரவத்தையும் தெரிவிக்க வேண்டும்.
தர்ம பாத யாத்திரைகள் இலங்கையர்களாகிய நமக்கு புதிய ஒன்றல்ல.
அது எமது கலாசாரத்தின் ஒரு அங்கமாகும். புத்தபெருமான் தனது முதல் அடியார்களுக்கு இது தொடர்பில் போதித்தார்.
புத்தரின் அந்தப் போதனையை முன்னிறுத்தி, உலகம் முழுவதும் வசிக்கும் எமது கௌரவத்திற்குரிய மகா சங்கத்தினர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பொதுமக்களின் நன்மைக்காகவும் சுகத்திற்காகவும் தர்மப் பிரயாணங்களை மேற்கொண்டுள்ளனர் என்று நான் கருதுகிறேன்.
மஹிந்த தேரரின் இலங்கைக்கு வருகையானது எமது நாட்டின் பாரிய கலாசாரத்தை உருவாக்குவதற்குப் பங்களித்தது.
அதன் பின்னர், 17 ஆம் நூற்றாண்டில் உபசம்பதா பிக்குகளை நாம் இழந்திருந்தோம் என்பதை நாம் அறிவோம்.
இதனால் மீண்டும் சாசனத்தை நிறுவும் சவாலை நாம் எதிர்கொண்டோம்.
அங்கு எமது சரணங்கர சங்கராஜ தேரரின் தலைமைத்துவம் மற்றும் தலையீட்டில் உபாலி நாயக்க தேரரினால் எமது நாட்டில் மீண்டும் பிக்கு சாசனம் நிலைநாட்டப்பட்டது.
இது தாய்லாந்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட பயணத்தின் விளைவாகும்.
அதேபோல் வெலிவிட்ட சரணங்கர சங்கராஜ தேரர் பாரிய தர்மப் பிரயாணங்களை மேற்கொண்டார்.
தர்ம நூல்களைத் தேடிக் கண்டறிந்து, பிக்குமார் பற்றிப் பரவியிருந்த தவறான கருத்துக்களை அகற்றி, தர்மத்தின் சாரத்தைப் பொதுமக்களிடம் கொண்டு செல்ல அவர் செயற்பட்டார்.
எனவே இவ்வாறான யாத்திரைகள் குறித்து எமக்கு நீண்ட வரலாறு உள்ளது.
எமது தேரர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக கிராமங்கள் மற்றும் நகரங்களுக்குச் சென்று, தமது கால்கள் தேயும் வரை, தமது குரல் ஓயும் வரை போதனைகளை வழங்கி தர்மப் பிரயாணங்களில் ஈடுபட்டுள்ளனர்.
பன்னாகர தேரர் உள்ளிட்ட குழுவினரின் இந்தப் நடைபயணமானது எமது நாட்டுக்குள் ஒரு புதிய தர்ம எழுச்சியை உருவாக்கியுள்ளதாக நான் கருதுகிறேன்.
ஒழுக்கம் மற்றும் தர்மத்தில் தேர்ந்த தேரர்கள் மீது எமது பொதுமக்களுக்கு எவ்வளவு பக்தியும் நம்பிக்கையும் உள்ளது என்பது இந்தப் பயணத்தின் மூலம் உறுதியானது.
பௌத்த மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் வீதியோரங்களில் காத்திருந்து, அவர்கள் மீது தமது கௌரவத்தையும் அன்பையும் வெளிப்படுத்துவதை நாம் கண்டோம்.
இது பௌத்த தர்மத்தின் விடுதலைச் சாரத்தைப் பொதுமக்களின் மனதில் பதிய வைப்பதற்கான ஒரு பாரிய முயற்சியாக அமைந்தது என நாம் நம்புகிறோம்.
எமது நாட்டின் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், பொருளாதாரச் செழிப்பை எட்டிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மத எழுச்சியும் ஏற்பட்டிருந்தது.
மத எழுச்சி வீழ்ச்சியடைந்த போதெல்லாம் பொருளாதாரம் மற்றும் சமூகம் வீழ்ச்சியடைந்தது.
எனவே எமது பொருளாதாரம் மற்றும் சமூகத்தை உயர்வாக வளர்த்தெடுக்க வேண்டுமானால், அதற்கு இணையாகப் புதியதொரு மத எழுச்சி அவசியமாகும். இன்று நாம் காண்பது, பாரிய அளவில் இல்லாவிட்டாலும் ஆங்காங்கே நடக்கும் சில சம்பவங்கள் மத எழுச்சி குறித்து மக்கள் மத்தியில் ஒரு வீழ்ச்சியை ஏற்படுத்துகின்றன.
எனவே, எமது அனைத்து மதத் தலைவர்களுக்கும் அந்த மதங்களின் கௌரவம், பெறுமதி, வரலாற்று மரபு, தர்மத்தின் சாரம் இவை அனைத்தையும் பாதுகாத்துக் கொள்ளும் பொறுப்பு உள்ளது. அரசாங்கம் என்ற ரீதியில் அதற்காக வழங்கக்கூடிய அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க நாம் தயாராக உள்ளோம்.
எமது நாட்டை ஒரு அமைதியான, மோதல்கள் இல்லாத நாடாக மாற்றியமைக்க வேண்டுமானால் சட்டம் மாத்திரம் போதுமானதல்ல.
நாம் பாராளுமன்றத்தில் போதியளவு சட்டங்களை இயற்றியுள்ளோம்.
சட்டத்தை அமுல்படுத்துவதற்கான நிறுவனங்களை நிறுவியுள்ளோம்.
அந்த நிறுவனங்களுக்கு வசதிகளையும் செய்து கொடுத்துள்ளோம்.
ஆனால் நாடு அறநெறி மிக்கதாக மாறியுள்ளதா? சட்டத்தை மதிப்பதாக உள்ளதா? நாட்டை அறநெறி மிக்கதாகவும் சட்டத்தை மதிப்பதாகவும் மாற்றுவதில் எமது மதஸ்தலங்களுக்குப் பாரிய பங்களிப்பு உள்ளது என நாம் நம்புகிறோம்.
எமது நாட்டை அபிவிருத்தி மற்றும் அமைதியான சமூகத்தை நோக்கி இட்டுச் செல்லும் பயணத்தில், மத எழுச்சியும் மதத்தை நோக்கிய சமூகமும் அவசியமாகியுள்ளது. அதற்காக இணைந்துகொள்ளுமாறு நான் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.
அமைதி பற்றிய உரையாடல்களில் எமது நாடு உலகிற்கு ஒரு சிறந்த உதாரணமாக இருக்கக்கூடிய பூமி.
போர் மோதல்கள், ஒருவருக்கொருவர் இடையிலான பகைமை, குரோதம், அவநம்பிக்கை என்பன நிலவியிருந்தன.
ஆனால் நாம் ஒரு நாடாகப் படிப்படியாக பகைமை, குரோதம், அவநம்பிக்கை என்பவற்றைத் தணித்து, அமைதியான அரசொன்றையும் ஒருவருக்கொருவர் கலாசாரங்களை மதிக்கும் சமூகத்தையும் உருவாக்குவதற்குத் தேவையான பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம்.
இலங்கையைப் போலவே உலகம் முழுவதும் பெரும்பான்மையான மக்களின் எதிர்பார்ப்பு அமைதிதான். பெரும்பான்மையான மக்கள் அமைதியை எதிர்பார்க்கும் போது மோதல்கள் எப்படி உருவாகின்றன? இந்த நேரத்திலும் உலகின் பல நாடுகளில் போர் பரவியுள்ளது. போரில் தற்காலிகமாக ஒரு தரப்பினர் வெற்றி பெற்றதாக நாம் நினைத்தாலும், போரைத் தற்காலிகமாக வென்ற நாடு கூட ‘எமக்குத் தேவையானது அமைதி’ என்றே கூறுகிறது.
அதுதான் யதார்த்தம்.
ஆனால் பொதுமக்கள் அமைதி மீது நம்பிக்கை கொண்டிருக்கும் போது ஏன் போர் உருவாகிறது? ஒரு
பக்கம் பொதுமக்கள் அமைதியை எதிர்பார்க்கும் அதே வேளை, அதிகார வர்க்கத்தினர் போரை நம்புகின்றனர்.
சந்தேகம், அவநம்பிக்கை, பகைமை, குரோதம் இல்லாத அரசொன்றை மற்றும் மனித சமூகத்தைப் பொதுமக்கள் எதிர்பார்க்கும் அதேவேளை, தீவிரவாதிகள் மற்றும் சதிகாரர்கள் பிரிவினையையும் இனவாத மோதல்களையும் எதிர்பார்க்கின்றனர்.
அதாவது அமைதியை விரும்பும் பெரும்பான்மையான மக்களை விஞ்சி, ஒரு சிலரே போரின் நிகழ்ச்சி நிரலைக் கையில் எடுத்து வழிநடத்திக் கொண்டிருக்கின்றனர். எனவே எமது தாய்நாடும் உலகமும் பெரும்பான்மையான மக்கள் எதிர்பார்க்கும் அமைதிப் பாதையில் நுழைய வேண்டும்.
எமது வணக்கத்திற்குரிய பன்னாகர தேரரும் நாமும் இந்த அனர்த்தத்தைக் காண்கிறோம்.
இந்த அனர்த்தம் ஏற்படுவதற்கான காரணத்தை அவர் போதித்தார்.
அமைதியின் போது முதலில் மேலோங்குவது மனிதாபிமானமே. போரின் போது முதலில் மரணிப்பதும் மனிதாபிமானமே.
எனவே, மீண்டும் மனிதர்களாக செயற்பட நாம் உறுதிபூண வேண்டும்.
இந்த நாடுதான் உலகின் அமைதியின் தீவு.
இந்த நாட்டை உலகின் முன்மாதிரியான தீவாக மாற்ற நாம் முயற்சி செய்து வருகிறோம். செல்வம், இயந்திரங்கள் என்பவற்றில் எம்மால் முதலிடத்தைப் பிடிக்க முடியாவிட்டாலும், மனிதாபிமானத்தில் உலகில் முதலிடத்தைப் பிடிக்க முடியும். அதற்காக எமது மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்கள் தொடர்ச்சியாக நிகழ்த்தும் போதனைகள் பேருதவியாக அமையும். அதன் மூலம்
அமைதியின் தீவை ‘மனிதாபிமானத்தின் தீவாக’ மாற்றுவோம் என்று அனைவருக்கும் அழைப்பு விடுத்து, எமது பன்னாகர தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினருக்கு மீண்டும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

