அஸ்வெசும பயனாளிகளுக்கு தவறுதலாக இரண்டு முறை வழங்கப்பட்டக் கொடுப்பனவு -சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு விசாரிக்குமாறு கோரிக்கை

அஸ்வெசும பயனாளிகளுக்கு தவறுதலாக இரண்டு முறை வழங்கப்பட்டக் கொடுப்பனவு -சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு விசாரிக்குமாறு கோரிக்கை

அரசாங்கத்தின் பணப்பரிமாற்றத்தில் ஏற்பட்ட பிழை காரணமாக, அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளுக்கு மாதாந்த கொடுப்பனவு இரண்டு முறை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இக்குற்றச்சாட்டை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் முன்வைத்ததோடு, சுதந்திர சட்டத்தரணிகள் (Free Lawyers) அமைப்பும் இது குறித்து விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளது.

சுமார் 500 மில்லியன் ரூபாய் மேலதிகமாகச் செலுத்தப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இது திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் மாயமான சம்பவத்தைப் போன்ற ஒரு நிதி முறைகேடு என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஏப்ரல் 2026 இல் சுமார் 1,733,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும வழங்கப்படவிருந்த நிலையில், ஒரு தொகுதியினருக்கு இரண்டு முறையும், மற்றுமொரு தொகுதியினருக்கு அரசாங்கம் வழங்கிய போனஸ் தொகையுடன் மேலதிகப் பணமும் கிடைத்துள்ளது.

நிதி விதிமுறைகளை மீறி, பொறுப்புக்கூறல் இன்றி, முறையான நிதித்துணைக் கட்டுப்பாடுகள் இன்றி பொது நிதி கையாளப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் அமைப்பு கடிதம் மூலம் சபாநாயகருக்கு அறிவித்துள்ளது.

கேகாலை, மொனராகலை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் இவ்வாறான இரட்டைப் கொடுப்பனவுகள் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசியலமைப்பின் 148 ஆவது பிரிவின் கீழ் பொது நிதியைக் கையாளும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உள்ளதால், பின்வரும் கேள்விகளுக்கு உடனடிப் பதில் வழங்கப்பட வேண்டும் என சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது:

எத்தனை குடும்பங்களுக்கு மேலதிகப் பணம் கிடைத்துள்ளது?
இதற்குக் காரணமான அதிகாரிகள் யார்? அவர்கள் அரசியல் நியமனங்கள் பெற்றவர்களா?
இது குறித்து திறைசேரி ஆரம்பகட்ட விசாரணைகளை நடத்தியுள்ளதா?
தவறுதலாக மேலதிகமாக வழங்கப்பட்ட பணத்தை ஏழை மக்களிடமிருந்து மீளப் பெறும்போது, அவர்களை மேலும் கஷ்டத்திற்கு உள்ளாக்காமல், தவணை முறையிலேயே அதனை அறவிடுமாறு அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )