சிறுவர்கள் செலுத்திய கேப் வாகனம் மோதி 14 வயது சிறுமி கால் ஒன்றை இழந்தார்

சிறுவர்கள் செலுத்திய கேப் வாகனம் மோதி 14 வயது சிறுமி கால் ஒன்றை இழந்தார்

மொனராகலை – சியம்பலாண்டுவ பிரதான வீதியின் சிரிகல, கிரிமண்டல சந்திக்கு அருகில் ஏற்பட்ட பயங்கர வாகன விபத்தில் 14 வயதுடைய பாடசாலை சிறுமி ஒருவரின் கால் அகற்றப்பட்டுள்ளதுடன், அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மொனராகலையிலிருந்து ஒல்பேகொட நோக்கி பயணித்த கேப் (Cab) ரக வாகனமும், ஒல்பேகொடவிலிருந்து மொனராகலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த சிறுமியும் அவரது தந்தையும் மொனராகலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிறுமி மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மொனராகலை, மதுல்ல பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை சிறுமியும் அவரது 47 வயதுடைய தந்தையுமே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

விபத்தின் காரணமாக சிறுமியின் ஒரு கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளதுடன், அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. தந்தை மொனராகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட, கேப் வண்டியை செலுத்திய 17 வயதுடைய பாடசாலை மாணவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் மொனராகலை, மதுருகெட்டிய பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவராவார்.

கேப் வண்டியை செலுத்திய மாணவரிடம் கனரக வாகனங்களை செலுத்துவதற்கான செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இருக்கவில்லை என மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவரிடம் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் இலகுரக வாகனப் பயிற்சியாளர்களுக்காக வழங்கப்படும் ஓட்டுநர் பயிற்சி உரிமம் மட்டுமே இருந்துள்ளது.

அந்த உரிமத்தைக் கொண்டு எந்த வகையிலும் கனரக வாகனங்களை ஓட்டுவதற்கு சட்டப்பூர்வ அனுமதி இல்லை என பொலிஸார் கூறுகின்றனர்.

கேப் வண்டியின் ஓட்டுநர் அதிவேகமாகவும், அலட்சியமாகவும், ஆபத்தான முறையிலும் வாகனத்தை செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தின் பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபரான மாணவர் மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், அவர் ஒரு சிறுவன் என்பதைக் கருத்திற்கொண்டு ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.

மொனராகலை பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் இச்சம்பவம் குறித்து மேலதிக விசேட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )