
பிள்ளையானை நான் சிறையில் சந்திக்கச் சென்றது இரகசியமானது அல்ல -உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயார் – நாமல் ராஜபக்ஷ
2018/2019 காலப்பகுதியில் சிறை வைக்கப்பட்டிருந்த TMVP தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் ‘பிள்ளையானை தான் சந்திக்கச் சென்றதாகவும், அது எந்த வகையிலும் இரகசியமானது அல்ல என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து இன்று (20) நீதிமன்றத்தில் விடயங்கள் முன்வைக்கப்பட்ட போது, தனது பெயரும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தமைக்கு பதிலளிக்கும் வகையில் தனது ‘X’ தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், அத்தகை விசாரணைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இன்று (20) கூறுகையில்; உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்று பிள்ளையானைச் சந்தித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக நாமல் ராஜபக்ஷ இட்டுள்ள ‘X’ பதிவு வருமாறு:
“2018/19 காலப்பகுதியில் TMVP கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் சிறையில் இருந்த போது, நான் அவரைப் பார்க்கச் சென்றது இரகசியமல்ல. உண்மையில், எனது அந்த வருகைகள் தொடர்பான சிறைச்சாலை ஆவணங்களை எப்போது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ள முடியும். அக்காலகட்டத்தில், அவர் 2015 ஜனாதிபதித் தேர்தலிலும், 2018 உள்ளூராட்சித் தேர்தலிலும் போட்டியிட்டு எமது கூட்டணியின் ஒரு பங்காளியாக அவர் இருந்தார்.”
“அறியக் கிடைத்துள்ளபடி, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரிப்பதற்காக பிரான்ஸ் வரை சென்றுள்ளது. இது அரசாங்கத்தின் முன்னுரிமைகள் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது.”
“நான் பிள்ளையானைச் சந்திக்கச் சென்றதை உறுதிப்படுத்துவதற்காக மட்டுமே அதிகாரிகள் இவ்வளவு தூரம் பயணம் செய்திருந்தால், அது தெளிவாக பொதுப் பணத்தை வீணடிப்பதாகும். எனக்குத் தெரிந்தவரை, தற்போது பிள்ளையான் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அல்ல. அப்படியென்றால், அரசாங்கம் இவ்வாறான ஊடக நாடகங்களை நடத்தி யாருக்கு என்ன நிரூபிக்க முயற்சிக்கிறது?”
“தேசிய மக்கள் சக்தியும் பல்வேறு சந்தர்ப்பங்களில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து பல கதைகளை சமூகமயப்படுத்தியுள்ளது. அரசாங்கம் தற்போது இந்த சோகத்தை அரசியல் எதிரிகளை இலக்கு வைப்பதற்காகப் பயன்படுத்த முயன்றால், அது இன்னும் உண்மைப் பதில்களையும் நீதியையும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் இழைக்கப்படும் கடுமையான அநீதியாகும்.”
“எந்தவொரு நியாயமான விசாரணைக்கும் முகம்கொடுக்க நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். அத்துடன் நிலவும் சந்தேகங்களை வெளிப்படைத்தன்மையுடன் தீர்த்துக் கொள்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு எங்களது முழுமையான ஆதரவை வழங்குவோம்.”
“, அரசியல் நாடகங்கள் மற்றும் ஊடகத் தலைப்புச் செய்திகளில் கவனம் செலுத்துவதை விடுத்து, நாட்டின் மக்களுக்காக அர்த்தமுள்ள முடிவுகளைப் பெற்றுக்கொடுப்பதில் தனது அவதானத்தைச் செலுத்துவதே அரசாங்கம் செய்ய வேண்டியதாகும் .

