
இந்தியாவை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் வருகிற 9-ந் திகதி மோதுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சான்ட்னர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்த தொடர் முழுவதும் நாங்கள் நல்ல அணிகளால் கடும் சவால்களை எதிர்கொண்டோம். இந்தியாவுக்கு எதிராக ஏற்கனவே விளையாடி நல்ல அனுபவத்தை பெற்றிருக்கிறோம். மீண்டும் அவர்களை சந்திப்பதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
இந்தியா தனது அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாடியுள்ளது. அதனால் பிட்ச்சை நன்கு அறிந்திருப்பார்கள். லாகூர் மைதானத்தை விட துபாய் பிட்ச் சற்று மெதுவாக இருக்கலாம். இது சவாலின் ஒரு பகுதியாகும்.
ஒரே அணியாக இணைந்து எதிரணியின் மீது நெருக்கடி செலுத்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய திட்டம். அணியில் 4 ஸ்பின்னர் இருப்பதால் நல்ல பலன் கிடைத்திருக்கிறது. துபாயில் நாங்கள் ஏற்கனவே விளையாடியிருக்கிறோம். அந்த ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக நாங்கள் கடும் நெருக்கடியை கொடுத்தோம்.
இதன் மூலம் அவர்களை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இறுதி போட்டியில் டாஸ் வெல்வதும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் என மிட்செல் சான்ட்னர் கூறினார்.