நாட்டின் உயர்கல்வியின் தரம் குறித்து திருப்தி அடைய முடியாது

நாட்டின் உயர்கல்வியின் தரம் குறித்து திருப்தி அடைய முடியாது

நாட்டின் உயர்கல்வியின் தரம் குறித்து திருப்தி அடைய முடியாது என்றும், கடந்த காலங்களில் ஏற்பட்ட நிறுவன சீர்கேடுகளே இந்த நிலைக்கு காரணம் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

அம்பாறை ஹார்டி உயர் தொழில்நுட்ப நிறுவனத்திற்கான கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

ஒவ்வொரு துறையிலும் நாட்டுக்குத் தேவையான தலைவர்களை உருவாக்காமல் இந்த நாட்டை மாற்ற முடியாது என்ற உண்மையை அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் உணர்ந்துள்ளோம். எனவே, கல்வித் துறையை சரியான திசைக்கு கொண்டுவர நாம் முன்னுரிமை அளித்து செயற்படுகிறோம்.

கல்வி சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான முதல் கட்டமாக, உயர்கல்வி நிறுவனங்களுக்கு முழுமையடையாத உட்கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யவும், வெற்றிடங்களை நிரப்பவும், தற்போதுள்ள பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்தவும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம்.

கடந்த காலங்களில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் விடுதி வசதிகள் அதிகரிக்கப்படவில்லை. அதற்கு நிதி அல்லது வேறு பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு பல்கலைக்கழகமும் மாணவர்களுக்கான விடுதிப் பிரச்சினைகளைத் தீர்க்க சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளோம்.

ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு நோக்கம் இருக்க வேண்டும். ஹார்டி நிறுவனத்தைப் போலவே, ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனித்துவம் உள்ளது. அந்த நிலையைப் பாதுகாத்து உயர்ந்த நிலையை நோக்கிச் செல்ல வேண்டும்.

பன்முகத்தன்மை கொண்ட பல நிறுவனங்கள் உள்ளன, அந்த நிறுவனங்கள் தங்கள் தனித்துவத்தைப் பாதுகாத்து இலக்கை நோக்கிச் செல்ல வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்.

எதிர்காலத்தில் பாடசாலைக் கல்வியில் தொழிற்கல்வியை மேம்படுத்துவதற்கு அதிக முன்னுரிமை அளிப்போம். இவ்வாறான நிலையில் எதிர்காலத்தில் ஹார்டி கல்வி நிறுவனம் போன்ற நிறுவனங்களுக்கு அதிக கவனம் செலுத்தப்படும்.

உயர்கல்விக்குப் பின்னர், அதிக மாணவர்கள் தொழிற்கல்விக்கு செல்கின்றனர், எனவே, தற்போதைய தொழிற்சந்தைக்கு மட்டுமன்றி, எதிர்கால தொழிற்சந்தைக்கும், பொருத்தமான மனித வளத்தை உருவாக்குவது அவசியம்.

இந்த நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களின் தரம் குறித்து நாம் திருப்தி அடைய முடியாது. கடந்த காலங்களில் ஏற்பட்ட நிறுவனங்களின் வீழ்ச்சியும் இதற்குக் காரணம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)