இலங்கை – வியட்நாம் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர் தம்மிக பட்டபெந்தி தெரிவு

இலங்கை – வியட்நாம் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர் தம்மிக பட்டபெந்தி தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை – வியட்நாம் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக கௌரவ சுற்றாடல் அமைச்சர் (வைத்தியர்) தம்மிக பட்டபெந்தி தெரிவுசெய்யப்பட்டார்.

இலங்கை – வியட்நாம் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் 2025.03.11 ஆம் திகதி சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இத்தெரிவு இடம்பெற்றது. இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ட்ரின் தி டாம் (Trinh Thi Tam) அவர்களும் இதில் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டார்.

அத்துடன், இலங்கை – வியட்நாம் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) ஹசாரா லியனகே தெரிவுசெய்யப்பட்டார்.

இங்கு உரையாற்றிய சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, 1970 முதல் ஆரம்பிக்கப்பட்டு கடந்த 55 ஆண்டுகளில் உறுதியாக விருத்தியடைந்துள்ள இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளை சுட்டிக்காட்டினார்.

வர்த்தகம், முதலீடு, விவசாயம், சுற்றுலா மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு வளர்ந்துள்ளது என்பதை அவர் வலியுறுத்தினார்.

பிராந்தியத்தில் வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவுபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் வியட்நாமுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கையின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார். வியட்நாம் தேசிய சட்டமன்றத்தின் துணைத் தலைவர் நுகுயென் டக் ஹை (Nguyen Duc Hai) தலைமையிலான வியட்நாம் பாராளுமன்றத் தூதுக்குழு 2025 மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகவும் சபாநாயகர் அறிவித்தார்.

“தூதுக்குழுவை வரவேற்பதற்கும், பயனுள்ள கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்கும் நாங்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறோம்,” என அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ட்ரின் தி டாம், நட்புறவுச் சங்கத்தின் மறுமலர்ச்சி இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் ஒரு புதிய ஆரம்பமாகும் எனத் தெரிவித்தார்.

பாராளுமன்ற முறைமைகள் மற்றும் சட்டவாக்க செயல்முறை குறித்த அனுபவங்களையும் அறிவையும் பகிர்ந்து கொள்வதை எளிதாக்குவதற்கும், இரு நாடுகளின் சட்டமன்ற அமைப்புகளுக்கு இடையே கலந்துரையாடல்கள் மற்றும் ஒத்துழைப்புக்களுக்கு செயற்பாட்டு ரீதியான சந்தர்ப்பத்தை உருவாக்குவதில் நட்புறவுச்சங்கத்தின் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

நட்புறவுச் சங்கத்தின் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான அமைச்சர் (வைத்தியர்) தம்மிக பட்டபெந்தி கருத்துத் தெரிவிக்கையில், வர்த்தகம், நிலைபேறான அபிவிருத்தி, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா போன்ற துறைகளில் பாராளுமன்ற ஈடுபாட்டை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், ஒத்துழைப்பை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் வியட்நாம் தூதுவர் வழங்கும் ஆதரவிற்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் நன்றியுரையாற்றிய நட்புறவுச்சங்கத்தின் புதிய செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஹசாரா லியனகே, வியட்நாம் தூதுவர் மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் ஆகியோரின் வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான நட்புறவுச் சங்கத்தின் நோக்கங்களை அடைந்துகொள்ள ஏனைய உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான தனது உறுதிப்பாட்டையும் அவர் வலியுறுத்தினார்.

கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )