
மக்கள் விடுதலை முன்னணியினர் பொய்கள் அடங்கிய பத்திரத்தையே முன்வைத்துள்ளனர்
வளமான நாடு அழகான வாழ்க்கை என்று மக்கள் விடுதலை முன்னணியினர் பொய்கள் அடங்கிய பத்திரத்தையே முன்வைத்துள்ளனர்.
வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கே ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளது. வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் போது ஆளுந்தரப்பினர் இந்த விஞ்ஞாபனத்தை காட்டி காட்டி விவாதத்தில் ஈடுபட்டனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் பொலன்னறுவை மாவட்ட வேட்பாளர்களுடன் நேற்று (24) இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர், ”மூன்றில் ஒரு பங்கு அதாவது 33 சதவீதம் மின் கட்டணத்தை குறைப்பதாக தேர்தல் மேடைக்கு மேடை உறுதியளித்து ஆட்சிக்கு வந்தனர்.
ஆறு மாதங்களுக்கு மின் கட்டணத்தை குறைக்க முடியாது என மின்சார சபை அறிவித்தது. ஆனால் மக்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு பொது பயன்பாட்டுக்கு ஆணைக்குழு 20% மின் கட்டணத்தை குறைத்தது. வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் மேலும் 13% ஆல் குறைக்க வேண்டும்.
எரிபொருள் விலை தொடர்பாகவும் இதுபோன்ற கதைகளே கூறப்பட்டன. கமிஷன், வரி என்று பேசி, அதிகாரம் கிடைத்தவுடன் அவற்றை நீக்கி பாரிய விலை குறைப்பைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்தனர். ஆனால் இன்னும் எரிபொருள் விலை குறையவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.