எதிரிகள் மீது தாக்குதல் நடத்துவதில் முப்படைகளுக்கு முழு சுதந்திரம்

எதிரிகள் மீது தாக்குதல் நடத்துவதில் முப்படைகளுக்கு முழு சுதந்திரம்

கடந்த 22-ந் திகதி யாரும் எதிர்பாராத நிலையில் காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதலை நடத்தினர்.

இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இத்தகைய கொடுஞ்செயலில் ஈடுபட்டது தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான டி.ஆர்.எப். என்பது தெரியவந்துள்ளது.

இதன் பின்னணியில் பாகிஸ்தான் இருக்கிறது என்று இந்தியா குற்றம் சாட்டி வருகிறது.

அப்பாவி மக்களை கொன்ற பயங்கரவாதிகளுக்கு, கற்பனை செய்யமுடியாத அளவுக்கு தண்டனை பெற்றுத்தருவோம் என்று பிரதமர் மோடி ஆவேசத்துடன் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து மத்திய அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. நேற்று பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் மத்திய பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங் சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்தார்.

இந்தநிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தருவதற்கான உயர்மட்ட ஆலோசனை கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று (29) மாலை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், முப்படை தளபதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய மோடி,

“எதிரிகள் மீது எந்த இடத்தில், எந்த நேரத்தில் எந்த இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதில் முப்படைகள், தாங்களே முடிவு செய்து கொள்ளலாம். எதிரிக்கு பதிலடி தர, இலக்குகளை தீர்மானிக்கும் முழு சுதந்திரம் இராணுவத்திற்கு உள்ளது.

இராணுவம், படைகள் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிராக மரண அடி கொடுக்க வேண்டியது நமது நாட்டின் உறுதிப்பாடு.“ என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )