
மாலினி பொன்சேகாவிற்கு அஞ்சலி செலுத்த வரும் மக்களுக்கான வசதிகளை வழங்கவும் இறுதி சடங்குகளுக்கான ஏற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடல்
மறைந்த புகழ் பெற்ற நடிகை மாலனி பொன்சேகாவின் இறுதி சடங்குகள் எதிர்வரும் திங்கட்கிழமை (26) சுதந்திர சதுக்கத்தில் அரச கௌரவத்துடன் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றது.
இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் தொடர்பிலான கலந்துரையாடல் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது .
மாலனி பொன்சேகாவின் பூதவுடல் நாளை (25) தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தரங்கனி மண்டபத்திலும், நாளை மறுநாள் (26) சுதந்திர சதுக்க மாளிகையிலும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
இறுதிச் சடங்குகள் 26 ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் சுதந்திர சதுக்க வளாகத்தில் அரச கௌரவத்துடன் நடைபெறும்.
மாலனி பொன்சேகாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த நாடு முழுவதிலுமிருந்து வருகை தரும் மக்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த நீண்ட கலந்துரையாடலும் இதன்போது நடைபெற்றது.
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரின்ஸ் சேனாதீர, மாலனி பொன்சேகாவின் உறவினர்கள், கலைஞர்கள் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

