
இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்பும் சட்டத் தடைகளை நீக்க அரசாங்கம் தீர்மானம்
போர்சூழலின்போது இந்தியா சென்றிருந்த இலங்கை தமிழர்கள் மீண்டும் நாட்டிற்கு திரும்பி வருவதற்கு தற்போதுள்ள சட்டத் தடைகளை நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இந்த விடயம் தொடர்பிலான தற்போதுள்ள குடியேற்றச் சட்டங்களைத் திருத்துவதற்கும், அவசர அமைச்சரவை ஒப்புதலைப் பெறுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
வடக்கில் வாழ்ந்த மக்களில் ஒரு குழுவினர் போரின் போது, பாதுகாப்பு தேடி இந்திய மாநிலமான தமிழ்நாட்டிற்கு சென்று தற்போது அங்குள்ள அகதி முகாம்களில் வசித்து வருகின்றனர்.
இந்த மக்கள் தொழில்களை பெற்றுக்கொள்வதிலும் , இந்தியர்களாக வாழ்வதிலும் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வறுமை நிலையிலுள்ளனர்
மேலும் பலர் நாடு திரும்ப விரும்புகின்றனர் .
தற்போதுள்ள குடிவரவு மற்றும் குடியேற்றச் சட்டங்கள் இந்த மக்கள் நாடு திரும்புவதற்கு ஒரு தடையாக மாறிவிட்டதால், அந்தச் சட்டங்களைத் திருத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும்
விரைவில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும் எனவும் அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்துள்ளார்.

