நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக அரசியல் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் 16 பெண்கள் உட்பட 39 பேர் உயிரிழப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக அரசியல் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் 16 பெண்கள் உட்பட 39 பேர் உயிரிழப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் 16 பெண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்திருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற அரசியல் பேரணியின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் சுமார் 163 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.அவர்களில் 11 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

உயிரிழந்த 39 பேரில் 35 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன ஏனையவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பேரணிக்கு விஜய் வருவது ஆறு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானதுடன் , மக்கள் கூட்டம் கட்டுப்படுத்த முடியாத நிலையை எட்டியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விஜய் இரவு 7 மணியளவில் கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும்போதே, சிலர் மயக்கமடையத் தொடங்கியதாகவும் ,அவர் பரப்புரையை முடித்துக் கொண்டு புறப்பட்ட பிறகு, பலர் கூட்டநெரிசலில் சிக்குண்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் குறித்து இந்திய பிரதமர் மோதி, தமிழக முதல்வர் ஸ்டாலின் , விஜய் ,ராகுல் காந்தி,நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா பத்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்குவதற்கும் , வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் வழங்கவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் உடனடியாக அமைக்கப்படும் எனவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமிழ்நாடு கரூர் மாவட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்,

“கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.” என எக்ஸ் தள பக்கத்தில் விஜய் பதிவிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )