
விஜய்யின் கரூர் அரசியல் கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் 16 பெண்கள் உட்பட 36 பேர் உயிரிழப்பு
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் 16 பெண்கள் உட்பட 36 பேர் உயிரிழந்திருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற அரசியல் பேரணியின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 50ற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பேரணியில் சுமார் 30,000 பேர் பங்கேற்றதாக தமிழ்நாட்டின் பொலிஸ் துறை தெரிவித்துள்ளது.
குறித்த பேரணிக்கு விஜய் வருவது ஆறு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானதுடன் , மக்கள் கூட்டம் கட்டுப்படுத்த முடியாத நிலையை எட்டியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா பத்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்குவதற்கும் , வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் வழங்கவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் உடனடியாக அமைக்கப்படும் எனவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமிழ்நாடு கரூர் மாவட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்,
“கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.” என எக்ஸ் தள பக்கத்தில் விஜய் பதிவிட்டுள்ளார்.

