சபாநாயகருக்கும் நேபாளத் தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

சபாநாயகருக்கும் நேபாளத் தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான நேபாள தூதுவர் புர்ணா பஹதூர் அவர்கள், மரியாதையின் நிமித்தம் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை அண்மையில் (03) பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.

எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நேபாளாத் தூதுக் குழுவினரை வரவேற்பதற்குத் தயாராக இருப்பதாக சபாநாயகர் இச்சந்திப்பில் குறிப்பிட்டார்.

இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையில் காணப்படும் நீண்டகால பரஸ்பர உறவுகள் மற்றும் ஒத்துழைப்புக்களை இருதரப்பினரும் நினைவுகூர்ந்ததுடன், இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தனர்.

இரு நாடுகளுக்கும் பொதுவாக இருக்கும் விவசாயத் துறையில் ஒத்துழைப்புடன் செயற்படுவதன் முக்கியத்துவத்தை சபாநாயகர் வலியுறுத்தியதுடன், உணவுத் தயாரிப்பு, உணவுப் பாதுகாப்பு போன்ற விடயங்களில் பரஸ்பர அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர கல்விசார் ஒத்துழைப்புக்கள் குறித்தும் இச்சந்திப்பில் கருத்தப் பரிமாற்றம் இடம்பெற்றது.

அத்துடன், தெற்கு-தெற்கு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நேபாளத்தின் உறுதிப்பாட்டையும் அந்நாட்டுத் தூதுவர் சுட்டிக்காட்டினார்.
ஊழல் மற்றும் மோசடியை ஒழிப்பதில் இலங்கை அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும், பாராளுமன்றத்தின் சட்டமியற்றல் செயற்பாடுகள் குறித்த அறிவைப் பகிர்வதற்கான புதிய ஆய்வு மையமொன்றை அமைப்பதற்கான திட்டங்கள் இருப்பதாகவும் சபாநாயகர் எடுத்துக் கூறினார்.

இரு நாடுகளினதும் பாராளுமன்றங்களுக்கிடையிலான பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் தொடர்புகளை விருத்தி செய்துகொள்ளும் நோக்கில் இலங்கை – நேபாள பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை பத்தாவது பாராளுமன்றத்தில் புதுப்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் கௌரவ சபாநாயகர் இதன்போது தெரிவித்தார்.

இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையிலான நீண்டகால நட்பை மேலும் மேம்படுத்துவது குறித்தும் இதில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )