
சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத எம்.பி.க்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
175 எம்.பி.க்களில் 80 பேர் இன்னும் தங்கள் சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 30ஆம் திகதிக்குள் தங்கள் சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பித்த எம்.பி.க்களின் பட்டியல், நேற்று முன்தினம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
சொத்து அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு கடந்த 30ஆம் திகதி முடிவடைந்த நிலையில் ,சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்காத எம்.பி.க்கள் மீது இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழு சட்ட நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டது .
புதிய ஆணையச் சட்டத்திற்கமைவாக சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறும் எம்.பி.க்களின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கை கூடுதல் கட்டணமாக வசூலிக்கும் அதிகாரம் ஆணையத்திற்கு உள்ளது.
ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 ஆம் திகதிக்கு முன் தமது அனைத்து சொத்துக்களின் விபரங்களையும் சபாநாயகரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இதேவேளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றத்தில் முன்பு பணியாற்றிய பாராளுமன்ற ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளை சம்பந்தப்பட்ட தலைவர்களிடம் சமர்ப்பிக்கவில்லை எனவும் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .

