
சடலம் மீட்கப்பட்டதால் சிங்கிமலை நீர்த்தேக்கத்தின் நீர் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம்
மாணவர் ஒருவர் தவறி விழுந்து சடலமாக மீட்கப்பட்டதையடுத்து ஹட்டன் சிங்கிமலை நீர்த்தேக்கத்திலிருந்து நீரை பெற்றுக்கொள்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் நீர் விநியோக சபை பொறுப்பதிகாரி லால் விஜேநாயக தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் நகருக்கு விநியோகிக்கப்பட்டும் நீர் சிங்கிமலை ஆற்றிலிருந்தே பெறப்படுகிறது எனவும் அவர் கூறினார் .
நேற்று முன்தினம் இந்த ஆற்றில் 17 வயதுடைய மாணவன் தவறி விழுந்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதனையடுத்து குறித்த ஆற்று நீர் நகர விநியோகத்திற்கு பெற்றுக்கொள்வதை ஹட்டன் நீர் விநியோக அதிகாரசபை நிறுத்திய நிலையில் இன்றைய தினம் அம்பகமுவ பொதுசுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார அதிகாரி சௌந்தர்ராகவன் மற்றும் ஹட்டன் நீர் விநியோக அதிகார சபை அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் கள ஆய்விற்காக சிங்கமலை நீர்த்தேக்கத்திற்கு விஜயம் செய்தனர்..
இதன்போது சிங்கிமலை நீர்த்தேக்கத்தின் மாதிரி நீர் பகுப்பாய்விற்காக எடுத்து செல்பட்டதுடன் ஆய்வறிக்கை கிடைக்கப்பெற்ற பின்னர் மேலதிக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஹட்டன் நீர்விநியோக அதிகாரசபை பொறுப்பதிகாரி லால் விஜேநாயக தெரிவித்தார்.
தற்போது ஹட்டன் டிக்கோயா இன்வேரி நீர் மூலத்திலிருந்து தண்ணீர் பெறப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, குறைந்த அளவில் நுகர்வோருக்கு வழங்கப்படுகிறது.
பகல் நேரங்களில் பாடசாலை பிள்ளைகள் உட்பட மக்கள் நீர்த்தேக்கத்திற்கு அடிக்கடி வருகை தருவதால், நீர்த்தேக்கத்திற்குள் நுழைவதைத் தடை செய்வது மற்றும் பகலில் பாதுகாப்பு வேலி அமைப்பது அல்லது பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவரை நியமிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சிங்கிமலை வனப்பகுதியில் புகைப்படம் எடுத்துவிட்டு 6 பள்ளி மாணவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, நீர்த்தேக்கத்தில் கால்களைக் கழுவ முயன்ற ஒரு மாணவர் நீர்த்தேக்கத்தில் விழுந்து காணாமல் போன நிலையில் பின்னர் சடலமாக மீட்கப்பட்டார் .

