
மத்திய கிழக்கு போரினால் ரஷ்யாவிற்கு அடித்த லக் எண்ணெய் வருமானம் இருமடங்கு அதிகரிப்பு
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக முன்னெடுத்துள்ள போர் நடவடிக்கைகளுக்கு மத்தியில், சர்வதேச சந்தையில் ரஷ்ய எண்ணெய்க்கான கேள்வி வேகமாக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யா தற்போது எண்ணெய் விற்பனை மூலம் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 760 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 23,800 கோடி இலங்கை ரூபாய்) வருவாய் ஈட்டி வருகிறது.
மார்ச் மாத இறுதியில் ரஷ்யாவின் உபரி லாபம் 3.3 பில்லியன் முதல் 4.9 பில்லியன் டாலர் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாத இறுதியில் ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு விற்பனை வருமானம் 12 பில்லியன் டாலரிலிருந்து 24 பில்லியன் டாலராக இருமடங்காக அதிகரிக்கக்கூடும் என பொருளாதார அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஈரானுக்கு எதிரான போர்ச் சூழலில் உலகளாவிய எரிசக்தி சந்தையை (Global Energy Market) ஸ்திரமாக வைத்திருக்கும் நோக்கில், ரஷ்ய எண்ணெய் மீதான தடைகளை அமெரிக்கா தற்காலிகமாக நீக்கியுள்ளது. இதன் விளைவாகவே ரஷ்யாவின் வருமானம் இவ்வாறு உச்சத்தை தொட்டுள்ளது.
கடலில் கப்பல்களில் பயணித்துக் கொண்டிருக்கும் ரஷ்ய கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருட்களை வாங்குவதற்கு ஏப்ரல் 11 ஆம் திகதி வரை உலக நாடுகளுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்தத் தடை நீக்கத்தினால் ஜனாதிபதி விளாடிமிர் புதின் பெரும் லாபமடைந்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

