வேகமாக நடைபெறும்மலையக ரயில் பாதை சீரமைப்பு பணிகள்ஜூன் இறுதிக்குள் நிறைவடையும் எதிர்பார்ப்பு

வேகமாக நடைபெறும்மலையக ரயில் பாதை சீரமைப்பு பணிகள்ஜூன் இறுதிக்குள் நிறைவடையும் எதிர்பார்ப்பு

“இலங்கையைக் கட்டியெழுப்புவோம்” (Rebuilding Sri Lanka) என்ற தேசியத் திட்டத்தின் கீழ், சிதைவடைந்த சாலைகள், பாலங்கள் மற்றும் ரயில் பாதைகளை புனரமைக்கும் பணிகள் சர்வதேச அங்கீகாரம் பெற்ற பொறியியல் நிறுவனங்களின் பங்களிப்புடன் அதிவேகமாக நடைபெற்று வருகின்றன.

போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க கடந்த 25-ம் திகதி நாணுஓயா மற்றும் அம்பேவலா இடையே உள்ள எல்கின் நீர்வீழ்ச்சி (Elgin Falls) பகுதியில் நடைபெற்று வரும் இறுதிக்கட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டார்.

தற்போது கொழும்பிலிருந்து வரும் ரயில்கள் ரம்புக்கணை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. எஞ்சிய பகுதிகளில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRI) ஆலோசனையுடன் மண் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாணுஓயா – அம்பேவலா இடையே நிலச்சரிவு மற்றும் அரிப்பு காரணமாக 14 இடங்களில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டன. இதில் 13 இடங்கள் ஏற்கனவே முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளன. தற்போது எல்கின் நீர்வீழ்ச்சி பகுதியில் மட்டுமே பணிகள் எஞ்சியுள்ளன.

கடந்த நான்கு மாதங்களாகக் கடினமான சூழலிலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் ரயில்வே தொழில்நுட்ப சேவைப் பிரிவு அதிகாரிகளையும் தொழிலாளர்களையும் அமைச்சர் சந்தித்துப் பாராட்டினார்.

அவர்களுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்தவும், பணிகளை விரைவுபடுத்தவும் அரசாங்கம் முழு ஆதரவை வழங்கும் என அவர் உறுதியளித்தார்.

மலையகப் பிராந்திய மக்களின் பிரதான போக்குவரத்து இணைப்பாகவும், சுற்றுலாத் துறையின் முதுகெலும்பாகவும் இந்த ரயில் பாதை திகழ்வதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

முழுமையான சீரமைப்புப் பணிகள் முடியும் வரை பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அவர் வலியுறுத்தினார்.

ஜூன் 2026-க்குள் இந்தப் பணிகள் நிறைவடைந்து மீண்டும் முழுமையான ரயில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )