
இரத்தினபுரி, கஹவத்தை துப்பாக்கிச் சூட்டு சந்தேக நபர்கள் இருவரை கொல்லப்பட்டவரின் உறவினர்கள் அடையாளம் காட்டினர்
இரத்தினபுரி, கஹவத்தை, யாயின்ன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் , பெல்மடுல்ல நீதவான் நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அடையாள அணிவகுப்பின் போது, கொல்லப்பட்ட இளைஞர்களின் உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி இரவு நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 6 சந்தேக நபர்கள் அடையாள அணிவகுப்பில் முற்படுத்தப்பட்டபோது அவர்களில் இருவர் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி, கஹவத்தை, யாயின்ன பகுதிக்கு கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி இரவு 09.00 மணியளவில் சென்ற இனந்தெரியாத நால்வர், அங்குள்ள வீடொன்றிலிருந்த இளைஞர்கள் இருவரை ஜீப் வாகனத்தில் கொஸ்கெல்ல பிரதேசத்திற்கு கடத்திச் சென்று அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 22 வயதுடைய இளைஞர் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 27 வயதுடைய இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் இளைஞன் கஹவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதன் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் 6 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர் .
மேலும் இருவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
இந்நிலையில், இன்றைய தினம் ,சந்தேக நபர்கள் பெல்மடுல்ல நீதவான் நீதிமன்றில்ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து 7 மற்றும் 8 ஆவது சந்தேக நபர்கள் நீதிமன்றில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பின் போது சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து 8 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேல்மாகாண வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொள்கின்றனர்.

