லிபிய இராணுவத் தளபதி விமான விபத்தில் பலி

லிபிய இராணுவத் தளபதி விமான விபத்தில் பலி

லிபிய இராணுவத் தளபதி முகமது அலி அகமது அல்-ஹதாத் துருக்கியின் அங்காரா அருகே இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தார்.

இராணுவத் தளபதி, நான்கு சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் மூன்று பணியாளர்களை ஏற்றிச் சென்ற தனியார் ஜெட் விமானம் அங்காராவிலிருந்து லிபியாவின் திரிபோலியை நோக்கி பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்காரா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சுமார் 42 நிமிடங்களுக்குப் பின்னர், உள்ளூர் நேரப்படி இரவு 8.52 அளவில் விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக துருக்கி உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா, எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளார்.

தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு முன்னர், அந்த விமானம் அவசர தரையிறக்க அனுமதி கோரியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், அங்காராவின் தென்மேற்கே உள்ள ஹைமானா மாவட்டத்தின் கெசிக்கவாக் கிராமத்திற்கு அருகே விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன.

இந்த விபத்தில் ஜெனரல் அல்-ஹத்தாத் மற்றும் மற்ற உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் உயிரிழந்த செய்தி தன்னை மிகவும் வருத்தமடையச் செய்துள்ளதாக லிபியாவில், லிபிய பிரதமர் அப்துல் ஹமீத் தபெய்பா தெரிவித்தார்.

இது லிபியாவுக்கு “மிகப்பெரிய இழப்பு” எனக் குறிப்பிட்ட அவர், நாட்டுக்காக உண்மையுடனும் அர்ப்பணிப்புடனும் சேவை செய்தவர்களை லிபியா இழந்துள்ளதாக கூறினார்.

ஜெனரல் அல்-ஹத்தாத் மற்றும் அவரது குழு, லிபியா–துருக்கி நாடுகளுக்கிடையிலான இராணுவ மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் துருக்கியில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இராணுவத்தளபதி அல்-ஹதாத் உயிரிழந்ததையடுத்து மூன்று நாள் துக்க தினமாக லிபிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )