
ஹொரன வைத்தியசாலை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி உயிரிழந்தவர் வேனுடன் 32 மீட்டர் முன்னோக்கி இழுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிப்பு
ஹொரன வைத்தியசாலை சந்திக்கு அருகில் வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 75 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த பெண் ஒருவர் தற்போது ஹொரன மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஓல்வின் இந்திரசிறி என்ற பெல்லப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இந்த விபத்தில் உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
போயா தினமாகிய இன்று அப்பகுதியிலுள்ள விஹாரை யொன்றில் சில் பெறுவதற்காக ஒரு தம்பதி பயணித்த மோட்டார் சைக்கிளில் சென்றபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மொரகஹேன பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையின் ஊழியர்களை ஏற்றிச் செல்லும் வேன் ஒன்று ஹொரன பகுதியிலிருந்து அங்குருவதொட்ட பகுதிக்கு சென்று கொண்டிருந்தபோது, அங்குருவதொட்ட திசையில் வந்த குறித்த மோட்டார் சைக்கிளில் ஹொரன வைத்தியசாலை சந்தியில் வலதுபுறம் திரும்பும் போது, விபத்து சம்பவித்துள்ளது.
காயமடைந்த கணவன் மனைவி இருவரும் ஹொரன மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கணவன் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர் வேனுடன் சுமார் 32 மீட்டர் முன்னோக்கி இழுத்துச் செல்லப்பட்டதாகவும் வேன் அதிக வேகத்தில் பயணித்தமையே விபத்திற்கான காரணம் எனவும் போலீஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வேன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஹொரணை போலீசார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

