
307,951 மாணவர்கள் இன்று தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று நடைபெறுகிறது.
இன்று காலை 9.30 ற்கு நாடு முழுவதும் உள்ள 2,787 பரீட்சை நிலையங்களில் புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறுகிறது.
இம்முறை 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்ச்சைக்கு 307,951 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.
பரீட்சைக்கான இரண்டாவது வினாத்தாள் முதலில் வழங்கப்பட்டு காலை 10.45ற்கு முடிவடையவுள்ளது.
அரை மணி நேர இடைவேளையின் பின்னர் முதல் பகுதி வினாத்தாள் காலை 11.15ற்கு தொடங்கும்.
இதற்கு பதிலளிக்க ஒரு மணி நேரம் வழங்கப்படுவதுடன் 12:15ற்கு பரீட்சை நிறைவடையவுள்ளது.
புலமைப்பரிசில் தேர்வின் போது ஏதேனும் பேரிடர் சூழ்நிலை ஏற்பட்டால், 117 என்ற அவசர தொலைபேசி எண்ணை அழைத்து தகவல் தெரிவிக்கலாம் எனவும் அதற்கான விசேட திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்தார்.
காலை 9:30ற்கு ஆரம்பமாகும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு ,பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை காலை 08:30ற்குள் பரீட்சை மண்டபத்திற்கு அழைத்து வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
” குழந்தைகள் எழுதத் தேவையான பேனாக்கள், பென்சில்கள், அழிப்பான்கள் மற்றும் அளவுகோல்களை எடுத்துச் செல்லலாம். அவற்றைப் பார்க்கக்கூடிய வெளிப்படையான பையில் எடுத்துச் செல்ல வேண்டும். மேலும், பரீட்சை எழுதுவதற்கான தாள்கள் வழங்கப்படும் எனவும் தேவையற்ற காகிதம் அல்லது கோப்பு அட்டைகளை எடுத்துச் செல்ல வேண்டாம்‘ எனவும் பரீட்சைகள் ஆணையர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி கேட்டுக்கொண்டார்.
பெற்றோர்கள் பரீட்சை நிலைய வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் குழந்தைகள் வினாத்தாளை கவனமாகப் படித்து அமைதியான மனதுடனும் அழுத்தமின்றி பதிலளிக்கக்கூடிய சூழலை உருவாக்குமாறு பரீட்சைகள் ஆணையர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி பெற்றோரை கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.

