ரணில் விக்ரமசிங்க வெளிநாடு செல்வதற்கான நிதியை அனுமதித்த சமன் ஏக்கநாயக்க கைது செய்யப்படுவாரா ?

ரணில் விக்ரமசிங்க வெளிநாடு செல்வதற்கான நிதியை அனுமதித்த சமன் ஏக்கநாயக்க கைது செய்யப்படுவாரா ?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளிநாடு செல்வதற்கான நிதியை அனுமதித்தமை தொடர்பில் ரணில் விசக்ரமசிங்கவின் செயலாளராக பதவி வகித்த சமன் ஏக்கநாயக்கவிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாட்டுப் பயணத்திற்கான நிதியை அங்கீகரித்தமை தொடர்பில் சமன் ஏக்கநாயக்கவிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக சட்டத் துறைக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபர் கலிங்க ஜெயசிங்க தெரிவித்தார்.

ரணில் விக்ரமசிங்க கைது மற்றும் விசாரணைகள் தொடர்பில் இன்று நடைபெற்ற சிறப்பு பொலிஸ் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சமன் ஏக்கநாயக்கவும் கைது செய்யப்படுவாரா என ஊடகவியலாளர்கள் இதன்போது கேள்வி எழுப்பினர்.

விசாரணைகள் நடைபெற்று வருவதால், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என , கலிங்க ஜெயசிங்க ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

வெளிநாட்டுப் பயணத்தின் போது அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று பிற்பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பதவிக் காலத்தில், 2023 செப்டம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் நியூயார்க்கிற்குச் சென்றிருந்தார்.

இந்த விஜயத்தை முடித்துக்கொண்டு நாட்டிற்கு திரும்புவதற்கு முன்பு, முன்னாள் ஜனாதிபதி தனது மனைவி மைத்ரி விக்கிரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள லண்டன் சென்றிருந்தார்.

இங்கிலாந்தின் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஜான் ராஃப்டர், லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் மூலம் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது மனைவிக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பிதழ் அனுப்பியிருந்தார்.

இதனையடுத்து ,முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த விஜயத்தின் போது அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி நபர் ஒருவர் சமீபத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர் .

இதனடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டு, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க மற்றும் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட உதவியாளராகவிருந்த சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமிருந்தும் வாக்குமூலங்கள் பெறப்பட்டன.

அதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்ட நிலையில்
அவர் நேற்று காலை 9 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார்.

சுமார் 4 மணி நேரம் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி பிற்பகல் 1.15 அளவில் கைது செய்யப்பட்டார்.

பின்னர், அவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது , ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பாக ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மற்றும் சந்தேக நபர் ரணில் விக்ரமசிங்க சார்பாக ஆஜரான ஜனாதிபதி வழக்கறிஞர் அனுஜா பிரேமரத்ன ஆகியோரின் வாதங்களை பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவை பிறப்பித்தார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை காரணமாக வைத்திய ஆலோசனையின் பேரில் புதிய மகசின் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )