
7ஆவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அஞ்சல் ஊழியர்களுக்கும் அமைச்சருக்கும் இடையிலான இன்று கலந்துரையாடல்
இன்று 7ஆவது நாளாகவும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கும்,துறைக்கு பொறுப்பான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிற்கும் இடையே இன்று சிறப்பு கலந்துரையாடல் நடைபெறுகின்றது.
அஞ்சல் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் கூட்டு அஞ்சல் தொழிற்சங்கங்கள் உட்பட பல தொழிற்சங்கங்கள் 19 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 17 ஆம் திகதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
வேலைநிறுத்ததினால் நாடு முழுவதும் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் அஞ்சல் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இன்று அமைச்சருடன் தமது பிரச்சினைகள் குறித்து விவாதிக்கத் தயாராக இருப்பதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.
இதேவேளை ,வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த பல உறுப்பினர்கள் தற்போது சேவை நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளதால், நாளை முதல் அஞ்சல் சேவைகளை வழக்கம் போல் மேற்கொள்ள முடியும் என எதிர்பார்ப்பதாக இலங்கை அஞ்சல் சேவைகள் சங்கத்தின் தலைவர் ஜகத் மஹிந்த தெரிவித்தார்.

