எதிர்வரும் 6 ஆம் திகதி விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ள ரணில் விக்ரமசிங்க
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 6 ஆம் திகதி விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
அன்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் ரணில் விக்ரமசிங்க இந்த அறிக்கையை வெளியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்ட நிலையில் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை கடந்த 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக மருத்துவ ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து, அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு பின்னர் அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு சிறைச்சாலை வைத்தியர்கள் தீர்மானித்தனர்.
இதனையடுத்து, சிறைச்சாலை தலைமையகத்தின் அனுமதியுடன் ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவருக்கு எதிரான வழக்கு கடந்த செவ்வாய்க்கிழமை மீண்டும் நீதிமன்றில் அழைக்கப்பட்ட நிலையில் Zoom காணொளி அழைப்பு மூலம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
வழக்கு விசாரணைகளை தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கசிங்கவிற்கு பிணை வழங்கப்பட்டது
தொடர்ந்து தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ரணில் விக்கிரமசிங்க நேற்று (29) காலை சாதாரண சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்ட பின் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியமை குறிப்பிடத்தக்கது

