
இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஏமன் பிரதமர் அகமது அல்-ரஹாவி மற்றும் பல அமைச்சர்கள் கொல்லப்பட்டனர்
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஏமன் அரசாங்கத்தின் பிரதமர் கொல்லப்பட்ட்டுள்ளார்.
ஏமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் பிரதமர் அகமது அல்-ரஹாவி மற்றும் பல அமைச்சர்கள் கொல்லப்பட்டதாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அறிக்கை ஒன்றின் ஊடாக அறிவித்துள்ளனர்.
ஹவுதி தலைமையிலான அரசாங்கத்தின் பிரதமராகப் கடந்த 2024 ஒகஸ்ட் முதல் அல்-ரஹாவி பொறுப்பிலிருந்தார்.
இஸ்ரேலிய படைகளால் கடந்த ஆண்டு முதல் அவர் குறிவைக்கப்பட்டதாக ஹவுத்திகள் குறிப்பிட்டுள்ளனர்.
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் இஸ்ரேலிய இராணுவம் ஏமனின் சனாவையும் தாக்கியுள்ளது.
இதேவேளை “ஏமனில் உள்ள சனா பகுதியில் ஒரு ஹவுத்தி பயங்கரவாத ஆட்சி இராணுவ இலக்கை” தமது படைகள் தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவமும் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் பயணிக்கும் மேற்கத்திய கப்பல்கள் மீது, ஹவுத்திகள் தாக்குதல்களை நடத்தி வருவதால் இஸ்ரேல் ,ஹவுத்தி நிலைகளை குறிவைத்து பதில் தாக்குதல்களை மேற்கொண்டது .
ஏமன் மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்த போதிலும் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவளிப்பதை தாம் நிறுத்தப்போவதில்லையென ஹவுத்திகள் கூறியுள்ளனர்.

