யாழில் தீவிரப்படுத்தப்படும் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

யாழில் தீவிரப்படுத்தப்படும் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

யாழ் மாவட்டத்தில் பருவ மழைக்காலம் ஆரம்பிக்க இருப்பதால் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியுள்ளது என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் யாழ் மாவட்டத்தில் 937 டெங்கு நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த வருடத்தில் யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் காரணமாக எந்தவொரு இறப்பும் பதிவு செய்யப்படவில்லை.

எனினும் யாழ் மாவட்டத்தில் பருவ மழைக்காலம் ஆரம்பிக்க இருப்பதால் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியுள்ளது.

பொதுமக்கள் மத்தியில் டெங்கு கட்டுப்பாட்டு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு நிறுவனங்களிலும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.

யாழ் மாவட்டத்தில் எதிர்வரும் செப்டெம்பர் 14ம் திகதி சகல வணக்கத்தலங்களிலும், 15ம் திகதி சகல அரச நிறுவனங்களிலும், 16ம், 17ம் திகதிகளில் சகல பாடசாலைகளிலும் இந்த டெங்கு விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெறும்.

இதனைத் தொடர்ந்து யாழ் மாவட்டத்தில் எதிர்வரும் செப்டெம்பர் 22ம் திகதி முதல் 24ம் திகதி வரையிலான மூன்று தினங்களும் விசேட டெங்கு கட்டுப்பாட்டு தினங்களாக பிரகடனப்படுத்தப்படுகின்றன.

இந்த காலப்பகுதியில் சகல வீடுகளிலும், வேலைத்தலங்களிலும், கல்வி நிறுவனங்களிலும், வர்த்தக நிலையங்களிலும், பொது இடங்களிலும் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களை அழிக்கும் சிரமதானப்பணி ஏற்பாடு செய்யப்படவேண்டும்.

இக்காலப் பகுதியில் சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஏற்பாட்டில் மேற்பார்வைக்குழுக்கள் வீடுகளையும் , வேலைத்தலங்களையும், கல்வி நிறுவனங்களையும் , வர்த்தக நிலையங்களையும் பார்வையிடுவர்.

எனவே யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறு அனைவரையும் வேண்டுகிறேன்”. என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )