
ஒரு செயற்திறன் அறிக்கை மற்றும் ஆண்டறிக்கைகளுக்கு சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அனுமதி
நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தின் 2024 ஆண்டுக்கான செயற்திறன் அறிக்கை மற்றும் இலங்கை திரிபோஷ லிமிடெட்டின் 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான ஆண்டறிக்கை என்பன சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனத்திற்கொள்ளப்பட்டு அனுமதிக்கப்பட்டன.
பாரளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஹால் அபேசிங்க தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் (10) நடைபெற்ற சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தின் போதே இந்த அறிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு அனுமதிக்கப்பட்டன.
இதன்போது நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தின் வருடாந்த செயற்திறன் அறிக்கை கருத்திற்கொள்ளப்பட்டதுடன், திணைக்களத்தின் தலையீட்டின் ஊடாக சமர்ப்பிக்கப்பட்ட மற்றும் தீர்க்கப்பட்ட பிரச்சினைகளின் எண்ணிக்கை அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் எண்ணிக்கையை மாதாந்த அடிப்படையில் புதுப்பிப்பதற்கான ஒரு கட்டமைப்பைப் பேணுவதன் அவசியத்தை குழு வலியுறுத்தியது. அதற்கமைய, அறிக்கையை விரிவாகப் பரிசீலித்ததன் பின்னர், அதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
அத்துடன், 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை திரிபோஷ லிமிடெட்டின் ஆண்டறிக்கைகள் கருத்திற்கொள்ளப்பட்டதுடன், உலக உணவுத் திட்டத்தால் நிதியளிக்கப்பட்ட உலர்த்திகள் மற்றும் குளிரூட்டும் அமைப்புகளுடன் பொருத்தப்பட்ட நவீன களஞ்சியசாலைகளை (silos) செயற்படுத்துவதன் மூலம் மூலப்பொருட்கள் மாசுபடுத்தப்படாமல் பாதுகாப்பது உறுதி செய்யப்படுகின்றது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, அமிர்தநாதன் அடைக்கலநாதன், (வைத்தியர்) இராமநாதன் அர்ச்சுனா, சமன்மலீ குணசிங்ஹ, (பேராசிரியர்) சேன நாணாயக்கார மற்றும் (வைத்தியர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

