
குற்றக் குழு உறுப்பினர் ”டிங்கர்” என்ற ஸ்ரீதரன் நிரஞ்சன் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்
துபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட சந்தேக நபரான ஸ்ரீதரன் நிரஞ்சன் அல்லது ‘டிங்கர்’ இன்று அதிகாலை நாட்டிற்கு அழைத்துவரப்பட்டார்.
இலங்கை பொலிசார், அரச புலனாய்வு துறை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாய் பொலிசார் நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது டிங்கர் கைதுசெய்யப்பட்டார்.
இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு , விமான நிலைய குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் பேலியகொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
குறித்த சந்தேக நபர் கொழும்பு 15 ஐ வசிப்பிடமாகக் கொண்ட 36 வயதுடையவர் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.
டிங்கர் என்ற இந்த நபர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான பழனி ஷிரான் குளோரியன் அல்லது “கொச்சிக்கடை ஷிரானின்” நெருங்கிய சகா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர், 16.10.2024 அன்று கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் உள்ள மஹவத்த பொது மயானத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் ஒருவரை கொலை செய்த குற்றத்தில், சந்தேக நபர்கள் வந்த காரை ஓட்டிச் சென்றவர் எனவும்
19.08.2025 அன்று பேலியகொட பொலிஸ் பிரிவில் உள்ள ஸ்ரீ ஞானரத்ன மாவத்தையில் ஒருவரை சுட்டுக் கொன்று, மற்றொரு நபரை பலத்த காயப்படுத்திய குற்றத்தைச் செய்யத் தேவையான துப்பாக்கிகளை கொண்டு சென்றதற்காக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சந்தேக நபருக்கு எதிராக வெளிநாட்டு பயணத் தடையும் விதிக்கப்பட்டது .
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் ஒகஸ்ட் 19 ஆம் திகதி வெளிநாடு சென்றிருப்பது தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் அளுத்கடை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

