கோப் குழுவினால் மேற்பார்வை செய்யப்படும் 457 அரச நிறுவனங்களின் தலைவர்களுக்குப் பாராளுமன்றத்தில் செயலமர்வு

கோப் குழுவினால் மேற்பார்வை செய்யப்படும் 457 அரச நிறுவனங்களின் தலைவர்களுக்குப் பாராளுமன்றத்தில் செயலமர்வு

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழுவின்) மேற்பார்வைக்கு உள்ளாகும் 457 அரசாங்க நிறுவனங்களின் பிரதானிகளைத் தெளிவுபடுத்தும் விசேட செயலமர்வொன்று அண்மையில் (02) பாராளுமன்றத்தில் நடத்தப்பட்டது.

கோப் குழுவினால் விசாரணைக்கு உட்படுத்தப்படும் 457 நிறுவனங்களின் தலைவர், பணிப்பாளர் நாயகங்கள், பிரதம நிறைவேற்று அதிகாரிகள் அல்லது முக்கிய பொறுப்பை வகிக்கும் அதிகாரிகள் ஏறத்தாழ 700 பேர் மூன்று குழுக்களாக அழைக்கப்பட்டு இந்தச் செயலமர்வு நடத்தப்பட்டது.

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த செயலமர்வில் வளவாளர்களாக பதில் கணக்காய்வாளர் நாயகம் ஜீ.எச்.டி.தர்மபால, அரசாங்க தொழில்முயற்சிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் கே.வி.சீ.தில்ருக்ஷி, தேசிய வரவுசெலவுத்திட்டத் திணைக்களத்தின் பணிப்பாளர் கே.எஸ்.எம்.டி.சில்வா, முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஏ.கருணாரத்ன மற்றும் ஆர்.கே.ஜயலத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இங்கு உரையாற்றிய அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர, அரசாங்க நிறுவங்கள் மற்றும் கோப் குழு தொடர்பில் மக்கள் மத்தியில் காணப்படும் நிலைப்பாட்டை மாற்ற வேண்டிய பொறுப்பு அரச நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் கோப் குழுவுக்குக் காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.

இதற்கு அமைய இச்செயலமர்வின் மூலம் பெறப்படும் விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் இதற்கான ஆரம்பமாக அமையும் என்றும், ஏற்கனவே காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து இந்த நிறுவனங்களை சரியான பாதையில் கொண்டுசெல்ல வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பு என்றும் அவர் தெரிவித்தார்.

கோப் குழுவினால் மேற்பார்வை செய்யப்படும் அனைத்து நிறுவனங்களின் தலைவர்களையும் ஒரே நேரத்தில் அழைத்து இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது வரலாற்றில் இதுவே முதல் முறை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நடைமுறையில் உள்ள சட்டதிட்டங்களுக்கு இணங்காத சந்தர்ப்பங்கள், சட்ட திட்டங்களைப் பிழையாகப் புரிந்துகொண்டு செயற்படும் சந்தர்ப்பங்கள், காலத்திற்கு ஏற்ற வகையில் விடயங்களைப் புதுப்பிக்கத் தவறுகின்றமை போன்ற பலவீனங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் சமரவீர அவர்கள் தெரிவித்தார்.

சட்டத்தில் உள்ள காலாவதியான உபபிரிவுகளை நிகழ்காலத்திற்கு பொருத்தமானதாக மாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

கோப் குழுவில் வெளிப்படும் ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகளுக்கு வழிகாட்டும் வகையில் நிலையியற் கட்டளைகளைத் திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு வருட காலத்திற்குள் ஒவ்வொரு நிறுவனத்தையும் வரவழைக்க முடியாது என்பதால், இந்த 457 நிறுவனங்களின் செயற்பாட்டையும் ஒவ்வொரு வருடமும் கண்காணிக்க புதியதொரு திட்டம் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாகவும் கோப் குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார். எதிர்காலத்தில் கோப் குழுவிற்கு அழைக்கப்படும் நிறுவனங்கள் விஞ்ஞான ரீதியான அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.

வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் நடைமுறைகளை உறுதிப்படுத்துவதில் தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் வகிபாகம் குறித்து பதில் கணக்காய்வாளர் நாயகம் விளக்கினார். அத்துடன், பெருநிறுவனத் திட்டம், செயற்பாட்டுத் திட்டம், நிறுவனக் கட்டமைப்பு, வருடாந்த அறிக்கை, பணிப்பாளர் சபையின் செயற்பாடுகள், வரவுசெலவுத்திட்ட முகாமைத்துவம், பணியாளர்களை இணைத்துக் கொள்ளல், வெற்றிடங்களை நிரப்புதல் போன்ற விடயங்களை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவது குறித்தும் நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. நடைமுறையில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் அவை தொடர்பான முன்மொழிவுகளை குழுவிற்குச் சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பும் நிறுவனத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் நிறுவனத் தலைவர்களின் முன்மொழிவுகள் மற்றும் யோசனைகளை எழுத்துமூலம் குழுவிற்குத் தெரிவிக்குமாறு கோப் குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.

இந்த நிறுவனங்களின் சட்ட அதிகாரிகள் மற்றும் ஏனைய அதிகாரிகளைத் தெளிவுபடுத்தும் வகையில் மேலும் செயலமர்வுகளை எதிர்காலத்தில் ஏற்பாடு செய்ய எதிர்பார்த்திருப்பதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

இந்தச் செயலமர்வில் கோப் குழுவின் கௌரவ உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேகர, அசித நிரோஷன ஏகொட விதான, சந்திம ஹெட்டிஆரச்சி, பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம்.ஜயலத் பெரேரா, முன்னாள் கணக்காய்வாளர் நாயகமும், கோப் மற்றும் கோபா குழுவின் ஆலோசகருமான எஸ்.சி.மாயாதுன்னே, கோப் குழுவின் ஆலோசகரும், முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியுமான பியசேன ரணசிங்க ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )