முறையான கொள்வனவு நடைமுறைகளுக்கு முரணாக 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் அரிசி இறக்குமதி செய்யப்பட்டதன் காரணமாக லங்கா சதொசவிற்கு  நஷ்டம்

முறையான கொள்வனவு நடைமுறைகளுக்கு முரணாக 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் அரிசி இறக்குமதி செய்யப்பட்டதன் காரணமாக லங்கா சதொசவிற்கு நஷ்டம்

2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் முறையான கொள்வனவு நடைமுறைகளுக்கு முரணாக அரிசி இறக்குமதி செய்யப்பட்டதன் காரணமாக லங்கா சதொசவிற்கு ரூ. 15,157,031,018 நஷ்டம் ஏற்பட்டதாக கோப் குழுவில் தெரியவந்தது.

லங்கா சதொச லிமிடெட் நிறுவனத்தின் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயற்திறனை ஆராய்வதற்காக, பாராளுமன்றத்தின் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழு, அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர அவர்களின் தலைமையில் அண்மையில் (10) பாராளுமன்றத்தில் கூடியபோது இந்த விடயங்கள் புலப்பட்டன.

May be an image of one or more people, dais and text that says "ලේකම செயலாளர் SECRETARY කාරක සහාවේ කාරකසහාවේසභාපති සභාපති குழுவின் ழுவி தவிசாளர் குழவின்தவிசாளர் சாளர் தவிச CHAIR CHAIROFTHECOMMITTEE OF THE COMMITTEE"

2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் இறக்குமதி செய்யப்பட்ட அரிசிக்காக ரூ. 27,011,980,142 செலவிடப்பட்ட போதிலும், அந்த அரிசி கையிருப்பை விற்பனை செய்ததன் மூலம் ரூ. 11,854,949,124 மாத்திரமே வருமானம் ஈட்டப்பட்டுள்ளது என இதன்போது கோப் குழு சுட்டிக்காட்டியது.

அதற்கமைய, உள்நாட்டு அரிசிச் சந்தை நிலைமை, நெல் அறுவடை மற்றும் அரிசிக்கான களஞ்சிய வசதிகள் குறித்து முறையான ஆய்வு மேற்கொள்ளாமல், முறையான கொள்வனவு நடைமுறைகளுக்கு முரணாக அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் இதனால் சதொச நிறுவனத்திற்கு சுமார் ரூ. 15,157,031,018 நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் குழு சுட்டிக்காட்டியது.

May be an image of one or more people

இது தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட்டதா என்று அதிகாரிகளிடம் குழு வினவியபோது, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) சட்டமா அதிபர் திணைக்களத்திடம் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்வதற்கு வழங்கியுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

அத்துடன், முறையான கட்டுமானங்களை மேற்கொள்ளாத 18 கட்டட உரிமையாளர்களிடமிருந்து நிறுவனத்திற்குச் சேர வேண்டிய நிதி இன்னும் அறவிடப்படவில்லை என்று கோப் குழு சுட்டிக்காட்டியது.

கட்டடங்களை வாடகைக்கு எடுக்கும் நிறுவனத்தின் வழிகாட்டுதல்களின்படி, எதிர்காலத்தில் கடைகள் ஆரம்பிக்கும் அனுமானத்தின் பேரில், கட்டடங்கள் இல்லாத வெற்று நிலங்களுக்கு முற்பணம் செலுத்தக்கூடாது என்றாலும், 2020 டிசம்பர் 31 ஆம் திகதிவரை 29 ஒப்பந்தங்களின் கீழ், மதிப்பீடு பெறப்படாமல், கட்டட நிர்மாணங்களுக்காக ரூ. 34,234,996 முற்பணமாகச் செலுத்தப்பட்டுள்ளது என்று குழு சுட்டிக்காட்டியது.

May be an image of one or more people and people studying

அதற்கமைய, இவ்வாறு நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்களில் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் கட்டுமானங்களை மேற்கொள்ளாத 18 நிறுவன உரிமையாளர்களுக்கு எதிராக ரூ. 27,435,000 அறவிடுவதற்காக நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது என்று இதன்போது புலப்பட்டது.

மேலும், அத்தியாவசிய பதவிகளுக்கும் ஒப்பந்த அடிப்படையில் அதிகாரிகள் நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய குழு, இந்தத் தற்காலிக ஆட்சேர்ப்பு காரணமாக அதிகாரிகள் அடிக்கடி மாறுவதால் நிறுவனத்தின் பொறுப்புக்கூறல் தொடர்பான சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று சுட்டிக்காட்டியது.

அதற்கமைய, இந்த நிலைமை தற்போது புரிந்து கொள்ளப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் இந்த நியமனங்களின் காலத்தை 5 ஆண்டுகள் வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

May be an image of text

அத்துடன், தற்காலிக நியமனங்கள் உள்ளிட்ட வேறு சில நியமனங்களுக்காக திறைசேரியின் அனுமதியின்றி வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் குறித்தும் குழு இங்கு சுட்டிக்காட்டியதுடன், இந்த நிலைமைகளை முறைமைப்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தியது.

இதற்கு மேலதிகமாக, நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிறுவன வளத் திட்டமிடல் முறைமை (ERP system) தொடர்பான பிரச்சினைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன் இந்த முறைமையை விரிவுபடுத்துவதற்காக அதிக செலவு செய்யப்பட்ட போதிலும் சில தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லை என்பதும் இங்கு வெளிப்படுத்தப்பட்டது.

இந்த அனைத்து விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடியதன் பின்னர், எதிர்காலத்தில் ஒரு பொறுப்புள்ள நிறுவனமாக சதொச கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று குழுவின் தலைவர் வலியுறுத்தினார். இதற்காக அதிகாரிகளின் அர்ப்பணிப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான லெப்டினன் கொமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க, சுதத் பலகல்ல, சந்திம ஹெட்டியாராச்சி, (வைத்தியர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, திலின சமரகோன், எம்.கே.எம். அஸ்லம் மற்றும் (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )