
பாடசாலை கிரிக்கெட்டை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வருடாந்தம் 1.5 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு
இலங்கையில் பாடசாலை கிரிக்கெட்டை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வருடாந்தம் சுமார் 1.5 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு வழங்கி வருவதாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (24) நடைபெற்ற அமர்வின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் அவர், ”பாடசாலை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காக வழங்கப்படும் இந்நிதி, பாடசாலை கிரிக்கெட் சங்கம் ஊடாக பல்வேறு பிரிவுகளின் கீழ் பயன்படுத்தப்படுகிறது.
இதில் வீரர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல், போட்டிகளை ஏற்பாடு செய்தல், மற்றும் தேவையான உட்கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட பணிகள் இடம்பெறுகின்றன.
மேலும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து பல பகுதிகளில் புதிய விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்யும் திட்டங்களும் முன்னெடுக்கப்பட உள்ளது.” என தெரிவித்துள்ளார்.

