இலங்கை – இந்திய சட்ட மாணவர்கள் குழு இலங்கைப் பாராளுமன்றத்திற்கு வருகை

இலங்கை – இந்திய சட்ட மாணவர்கள் குழு இலங்கைப் பாராளுமன்றத்திற்கு வருகை

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் பொது மற்றும் சர்வதேச சட்டப் பிரிவின் மாணவர்களும், இந்தியாவின் மும்பையில் உள்ள அமிட்டி சட்டக் கல்லூரியின் மாணவர்களும் அண்மையில் (21) இலங்கைப் பாராளுமன்றத்திற்கு ஒரு கல்விச் சுற்றுலா நோக்கமாக வருகை தந்தனர்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் பொது மற்றும் சர்வதேச சட்டப் பிரிவு, சுற்றாடல் சட்டம் மற்றும் கொள்கைக்கான நிலையம் (CELP) மற்றும் இந்தியாவின் மும்பையில் உள்ள அமிட்டி சட்டக் கல்லூரி ஆகியன இணைந்து ஏற்பாடு செய்யும் ”இந்து – இலங்கை சுற்றாடல் சட்ட வாரம் – 2025” ஐ முன்னிட்டு அமுல்படுத்தப்படும் கல்விசார் நிகழ்ச்சித் தொடரின் ஒரு அங்கமாகவே சட்ட மாணவர்கள் குழுவினர் இவ்வாறு பாராளுமன்றத்திற்கான கல்விச் சுற்றுலாவில் கலந்துகொண்டனர்.

பாராளுமன்றத்திற்கு வருகை தந்த இம்மாணவர்களுக்கு முதலாவதாக, பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் சேவைப் பிரிவின் வழிகாட்டலின் கீழ் பாராளுமன்ற வளாகத்தையும் சபை மண்டபத்தையும் அவதானிக்கும் சுற்றுலாவில் பங்கேற்று அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

அதனையடுத்து, பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா அவர்களின் தலைமையில் அவர்களுக்காக ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதன்போது, இலங்கையின் சட்டவாக்க செயன்முறை, பாராளுமன்றத்தின் பங்கு மற்றும் செயற்பாடு குறித்து அவர் விளக்கமளித்தார். அத்துடன், சட்ட மாணவர்களின் கேள்விகளுக்கும் இதன்போது பதில்கள் வழங்கப்பட்டன.

கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் பொது மற்றும் சர்வதேச சட்டப் பிரிவின் தலைவர் பேராசிரியர் கோகிலா லங்காத்திலக்க கோணசிங்க உள்ளிட்ட சட்ட பீட விரிவுரையாளர்களும், இந்தியாவின் மும்பையில் உள்ள அமிட்டி சட்டக் கல்லூரியின் பணிப்பாளர் பேராசிரியர் வி.எஸ். ஜிஜிமன் உள்ளிட்ட அக் கல்லூரியின் விரிவுரையாளர்களும், இரண்டு நாடுகளின் சட்ட மாணவர்களும் அடங்கிய குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )