வெள்ளை நிற உடை அணிந்து இருண்ட செயல்களைச் செய்ய முயற்சிப்பவர்களுக்கு கட்சியில் இடமளிக்கலாமா ?

வெள்ளை நிற உடை அணிந்து இருண்ட செயல்களைச் செய்ய முயற்சிப்பவர்களுக்கு கட்சியில் இடமளிக்கலாமா ?

ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றவியல் வலையமைப்புகளுடன் தொடர்புடைய நபர்கள் ,இலங்கையின் அரசியல் களத்தில் ஊடுருவ தீவிரமாக முயற்சிப்பதாக பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய எச்சரித்துள்ளார்.

இந்த நபர்களில் சிலர் ஏற்கனவே அரசியலில் நுழைந்து எதிர்கால தேசியத் தேர்தல்களில் போட்டியிடத் தயாராகி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

“இது அரசியல் கட்சிகள் அவதானத்துடன் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான நபர்களுக்கு தமது கட்சியில் உறுப்பினர் அல்லது வேட்புமனு வழங்கலாமா என்பதை ஒவ்வொரு கட்சியினரும் தீர்மானிக்க வேண்டும், ” என பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய கூறினார் .

இந்த தீவிர பிரச்சினை கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்டது .
அதனால் அனைத்து பிரிவினருக்கும் இந்த விடயம் தொடர்பில் திறந்த உரையாடல் மற்றும் பொறுப்புக் கூறலுக்கு பொலிஸ் மாஅதிபர் அழைப்பு விடுப்பதாக கூறினார்.

இந்த குற்றவியல் நபர்கள்,சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு அரசியலில் கிடைக்கும் சட்டபூர்வமான தன்மையை ஒரு கேடயமாகப் பயன்படுத்துகின்றனர் எனவும் பொது சேவை என்ற போர்வையில் தங்கள் குற்றச்செயல்களை மறைக்க முயற்சிக்கின்றனர் எனவும் பொலிஸ் மாஅதிபர் தெரிவித்தார்.

“இவ்வாறாக அரசியலில் ஊடுருவ முயற்சிக்கும் நபர்கள் வெள்ளை நிற உடை அணிந்து இருண்ட செயல்களைச் செய்கிறார்கள். போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு ஒரு திரையாக அரசியலைப் பயன்படுத்துவதே அவர்களின் குறிக்கோள்” எனவும் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய மேலும் கூறினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )