
“வனப் பாதுகாப்பு ” கூட்டு செயல்பாட்டு பிரிவு இன்று முதல் நடைமுறையில்
வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம், வனப் பாதுகாப்புத் திணைக்களம், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் முப்படையின் பிரதிநிதிகளுடன் இணைந்து “வன பாதுகாப்பு “என்ற கூட்டு செயல்பாட்டுப் பிரிவு நிறுவப்பட்டுள்ளது.
இப்பிரிவின் திறப்பு விழா இன்று (03) கொழும்பு 07, ஹெக்டர் கொப்பேகடுவ வீதி, இலக்கம் 07 இல் அமைந்துள்ள சுற்றாடல் அமைச்சின் (வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்புப் பிரிவு) வளாகத்தில் சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்தி அவர்களின் தலைமையில் மற்றும் பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி அவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.
24 மணி நேரமும் செயல்படும் துரித அழைப்பு சேவை மூலம் இந்த நடவடிக்கைப் பிரிவு சுறுசுறுப்பாக இயங்கும். இலங்கையின் வனப் பகுதிகளுக்கும், அது தொடர்பான சேதங்களுக்கும் சேதங்கள் குறித்தும் 1995 என்ற இலக்கத்தின் ஊடாகப் பொதுமக்கள் இந்த நடவடிக்கைப் பிரிவுக்குத் தகவல்களை வழங்க வாய்ப்புள்ளது.
அதிகரித்து வரும் வனக்குற்றங்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கும், அக்குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், பொதுமக்களுக்கு நம்பகமான முறையில் தகவல்களை வழங்குவதற்கும் பின்னணியை உருவாக்குவதற்காக முப்படைகள், விசேட அதிரடிப்படை, வனவிலங்குப் பாதுகாப்பு மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உத்தியோகத்தர்களைக் கொண்ட இந்த நடவடிக்கைப் பிரிவு இன்று (3) முதல் செயல்படுகிறது.

