
இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு
இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு 2025.11.04 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தின் பழைய பாராளுமன்ற சபை மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர மற்றும் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரியின் மாணவ மாணவிகளுக்கு பாராளுமன்ற நடைமுறை குறித்த பிரயோக ரீதியான அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, அந்தக் கல்லூரியும், ஜனாதிபதி செயலகமும், இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களமும் இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.
இந்நிகழ்வில், ஜனாதிபதியின் சட்டப் பணிப்பாளர் நாயகம் சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.எம். விஜேபண்டார, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சுபாஷ் ரோஷன கமகே, ஜனாதிபதியின் மக்கள் தொடர்புப் பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே ஆகியோரும் பங்கேற்றனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்கள், மாணவர் பாராளுமன்றத்தின் உறுப்பினர்களாக ஒழுக்கத்தை உரிய முறையில் பேணுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
சட்டத்திற்குக் கீழ்ப்படியாத ஒருவரால் சட்டமியற்றும் செயன்முறையில் ஈடுபட முடியாது என்றும் அவர் கூறினார். மேலும் கருத்துத் தெரிவித்த பிரதி சபாநாயகர், அரசியல்வாதியும் இராஜதந்திரியும் இரு வேறு நபர்கள் என்றும், அரசியல்வாதி எதிர்கால வாக்குகளை இலக்காகக் கொண்டு செயற்படுகையில், இராஜதந்திரி அடுத்த தலைமுறையை இலக்காகக் கொண்டு முடிவுகளை எடுக்கும் நபர் என்றும் வலியுறுத்தினார்.
இங்கு உரையாற்றிய குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர அவர்கள்,

மாணவர் பாராளுமன்றத்தின் மூலம் பிள்ளைகளின் வாழ்க்கையில் அடையக்கூடிய நல்ல பழக்கவழக்கங்கள் மற்றும் அதன் மூலம் அந்தப் பிள்ளைகள் தங்கள் வாழ்க்கையில் வெற்றிபெறக்கூடிய சந்தர்ப்பம் பற்றி கருத்து தெரிவித்தார்.
அத்துடன், உலகில் உள்ள ஏனைய நாடுகளில் மாணவர் பாராளுமன்றங்கள் இயங்கும் விதத்திற்கு உதாரணங்களை சுட்டிக்காட்டிய குழுக்களின் பிரதித் தவிசாளர், அந்த நாடுகளில் தேசிய ரீதியான பிரச்சினைகளைத் தீர்க்கும் போது மாணவர் பாராளுமன்றங்கள் ஊடாக தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் சமர்ப்பித்துள்ளார்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், ஒரு தலைவர் என்பவர் அதிகாரத்தை அனுபவிக்கும் நபர் அல்ல என்றும், தலைவர் என்பவர் தனது சமூகத்திற்கும் நாட்டிற்கும் சேவை செய்வபரே என்றும் அவர் மேலும் கருத்துத் தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, சீவலி மத்திய கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் சபாநாயகர் உட்பட உறுப்பினர்கள் மொழியைச் சிறப்பாகக் கையாண்டமைக்காக தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
அதனையடுத்து அவர் பாராளுமன்றத்தின் செயன்முறை மற்றும் அதன் பங்கு பற்றி விளக்கியதோடு, பாராளுமன்றம் எவ்வாறு செயற்படுகிறது என்பது பற்றியும் தெளிவுபடுத்தினார்.
இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஆரம்பித்ததை அடுத்து, சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவினர் பதவியேற்றனர்.

அதனையடுத்து, மாணவர் பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அமைச்சர்களும் தங்கள் அமைச்சுக்கள் மூலம் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து சபைக்கு அறிவித்தனர்.
இதன்போது மாணவர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய மாணவ மாணவிகளுக்கு விருந்தினர்களால் சான்றிதழ்களுகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல, இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரியின் அதிபர் கப்டன் நீல் தம்மிக வத்துக்காரவத்த உட்பட கல்லூரியின் ஆசிரியர்கள் குழுவினர் மற்றும் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

