
போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட அதிபருக்கு மீண்டும் விளக்கமறியல்
அநுராதபுரம் பிரதேசத்தில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை, இம் மாதம் மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தம்புத்தேகம நீதவான் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 5 ஆம் திகதி, அநுராதபுரம் எப்பாவல பிரதேசத்தில் உள்ள ஒரு ஆரம்பப் பாடசாலையின் அதிபர், ஒரு கிலோவிற்கும் அதிகமான ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டார்.
இதன்போது, குறித்த அதிபருக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் எப்பாவல, எதகல பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றின் பின்னால் புதைக்கப்பட்டிருந்த நிலையில், 1 கிலோ 185 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட அதிபரின் மனைவி தேசிய மக்கள் சக்தியின் (NPP) பேலியகொட நகர சபையின் உறுப்பினராக இருப்பது பின்னர் தெரியவந்தது.
மேலும், குறித்த அதிபரின் மகனும் சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் 25 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர், சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டமை காரணமாக, கைது செய்யப்பட்ட அதிபரை அவரது பதவியில் இருந்து இடைநிறுத்தம் செய்ய வட மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தீர்மானித்திருந்தார்.
இதற்கிடையில், கணவர் மற்றும் மகன் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளில் சிக்கியதன் காரணமாக, பேலியகொட நகர சபை உறுப்பினரான தேசிய மக்கள் சக்தியின் பெண் உறுப்பினர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

