
மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை வழங்கலை மேம்படுத்த நடவடிக்கைகள்
மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை வழங்கலை மேம்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு செயலமர்வு நேற்று (20) மாற்றுத்திறனாளிகள் தொடர்பான பாராளுமன்ற உறுப்பினர்கள் மன்றத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா தலைமையில் நாரஹேன்பிட்ட மெஹெவர பியச கட்டிடத்தில் அமைந்துள்ள தொழில் அமைச்சில் நடைபெற்றது.
இந்த செயலமர்வில் தொழில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இந்த செயலமர்வு, அவுஸ்திரேலிய உதவிக்கான சர்வதேச தேர்தல் அமைப்பு நிறுவனம் (IFES) இன் நிதி உதவியுடன் தொழில் அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்டது, இது அமைச்சு மற்றும் அதன் இணைப்பு நிறுவனங்களின் மக்கள் தொடர்புகளில் பணிபுரியும் பணியாளர் அதிகாரிகளை இலக்காகக் கொண்டது.
அனைத்து அமைச்சுக்களையும் இலக்காகக் கொண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ள தொடர் செயலமர்வுகளில் முதலாவதாக நடைபெற்ற இந்த செயலமர்வு, மாற்றுத்திறனாளிகள் வெளி உலகில் எதிர்கொள்ளும் பல்வேறு கடினமான அனுபவங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளைப் பெறுவதில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விவாதித்தது. இந்த நிகழ்ச்சி மாற்றுத்திறனாளிகளால் வழிநடத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்டது விசேட அம்சமாகும்.

